Sunday, July 12, 2009

கிராம வாழ்க்கை - தொலைந்துபோனதேன்?

வாழ்க்கையின் மிகச்சிறந்த சுவாரஸ்யம் எதில் இருக்கிறது? அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத அதன் மர்மம்தான் என்று படுகிறது. முன்பின் பரிச்சயம் இல்லாத மலைப்பாதைகளைப் போல் புதிது புதிதான திருப்பங்களையும், தரிசனங்களையும் தினம் தினம் கொட்டிக் கொடுக்கிறது கிராமத்து வாழ்க்கை.

வாழ்க்கை, ஒவ்வொரு நாளும் நம்மை எப்படி கட்டமைக்கப் போகிறது? திகட்டத் திகட்ட சந்தோஷங்களை ஊற்றியா? சோகங்களின் சங்கிலித் தொடர்களில் சிக்க வைத்தா? வெறுமையின் இருட்டறையிலிருந்து நிராசைகள் நிரப்பியா? எதுவுமே தெரியாது.

ஆனாலும், கிராம வாழ்க்கையில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் நம்மைப் பதில் தெரியாத பிரதேசத்திற்கு அழைத்து சென்று கொண்டுதான் இருக்கின்றன.

எவ்வளவு திட்டமிட்டு தொடங்கினாலும் நம்மையறியாமல் நம் நாள்களின் நிகழ்வுகளை இயற்கையின் கை மாற்றி எழுதுகிறது. இந்த மாறிய புதிர்கள்தான் வாழ்க்கை. காலத்தின் முடிவிலிருந்து கிளம்பும் ஒரு சின்ன தொலைப்பேசிக் குரல், முத்திரைக் குத்தப்பட்ட ஒரு கடிதம், வழியில் சந்திக்க நேரும் ஒரு சினேகம், சட்டென்று அந்த தருணத்தின் வெயில், காலம் இடம் போன்றவற்றின் கன பரிமாற்றத்துடன் நம்மை மாற்றி அமைக்கும் யாரோ ஒருவரின் வாக்கியம் என வாழ்க்கையின் சதுரங்க பலகையில் பலவிதமான காய்கள் நம்மை நோக்கி நகர்த்தி வைக்கப்படுகிறது. கட்டங்களை மீறும் குற்றம் கலந்த குறுகுறுப்புடன் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

விழுப்புரம் எனபக் கூறிக்கொள்ளும் நான் விழுப்புரம் - திருச்சி சாலையின் பரபரப்புகளுக்கு இடையே சலனமின்றி இருக்கும் கிராமம் அது.... என் கிராமம் தென்பெண்ணையாற்றின் கரையில்.

தாத்தா விவசாய வேலை செய்பவர், பாட்டிதான் எங்களைப் பார்த்துக் கொள்வார். எந்த நேரமும் வீடு களைகட்டியிருக்கும். அந்தக் கூரை வீட்டின் சுவரோரத்தில் இருக்கும் எல்லா பானைகளையும் சிறுவயதில் என் கைகள் துழாவியிருக்கின்றன, முறுக்கு எல்லடைக்காக. இரவு நேரம் வந்து விட்டால் பாட்டி அனைவருக்கும் சோறூட்டி கதை சொல்ல ஆரம்பித்து விடுவாள். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என கதைகள் சஞ்சரிக்க ஆரம்பித்து விடும். சில கதைகள் திகைப்பை அளித்து மிரட்டி எடுக்கும். சில கதைகள் சிரிப்பை வரவழைக்கும். சில கதைகள் யோசிக்க வைக்கும்.

வாழ்க்கை முழுவதும் ஆயிரம் ஆச்சரியங்கள் கொட்டிக் கொடுத்த கிராமப் பயணம் இப்போதோ விடுமுறைகளில் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விடுமுறையில் எல்லாப் பேர பிள்ளைகளும் வந்து விடுவார்கள் என நாள்களை எண்ணியவாறே தாத்தா பாட்டி இப்போதும் காத்துக் கிடப்பார்கள். அதுவரை சந்திக்காத உறவுகள் எல்லாருமே அந்த விடுமுறைக்காகக் காத்துக் கிடப்போம்.

தாத்தா பாட்டியும் எங்களைப் போல் விடுமுறைக்காகக் காத்திருப்பார்கள். அப்பாவிடம் எப்போது பேசினாலும் 'மாதம் ஒரு முறை தாத்தாவிடம் உன் குழந்தையை ஒரு முறை கொண்டு வந்து காட்டி விட்டு போ' என வேண்டுகோள் வைப்பார். என் சிறுவயதில் தாத்தாவின் இராமாயணம், மகாபாரதம் கேட்க புரட்டாசி இரவுகளில் பேயாய் விழித்திருந்த நாட்கள் ஒவ்வொன்றும் இன்று தாத்தா பாட்டியின் தனிமையைப் பேசும். என் தலைமுறையின் இளைய வாரிசுகள் எல்லாம் கோடையில் கூடி கூத்தடிக்கும் போது, அந்த மூத்த தலைமுறையின் முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவதைப் பார்த்திருக்கிறேன்.

விழுப்புரம் பஸ் நிலையத்தில் தாத்தா பாட்டிக்கு பழம் மற்றும் கார வகைகளை வாங்கி கொண்டு செல்வது என் பயண வழக்கங்களில் ஒன்று. விழுப்புரம் நகரத்திலும் கிராமத் தனம் இருந்தாலும் என் தாத்தா பாட்டியின் கிராமத்தின் மீது எனக்குத் தனி காதல் இருந்தது. சென்ற விடுமுறைக்கும் இந்த விடுமுறைக்கும் மாற்றம் இல்லாத புழுதி படிந்த தெருக்கள். மக்களின் எளிமையான வாழ்க்கை. விவசாயத்தை நம்பி இருக்கும் பொருளாதாரம். வார்த்தைக்கு வாக்கப்பட்ட மக்கள் என எல்லாமும் பிடித்திருந்தது.

கிராமங்களில் எத்தனை எத்தனை மரங்கள்? ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு ரகசியம் காத்திருந்தது. தென்னை மரம் உடம்பெல்லாம் வளையல்களோடு இளநீர் திருட அனுமதிக்கும். பனைமரம் மார்புகளில் சிராய்ப்புகளைப் பரிசாகக் கொடுத்து நுங்குகளுடனும், சிறு சிறு தேள்களின் கடியுடனும், காத்திருக்கும். சடைசடையாய் பழங்கள் பழுத்த புளியமரங்கள் மஞ்சளும், சிவப்பும் கலந்த பூக்களுடன், தூக்கில் தொங்கி இறந்தவர்களின் ஆவிகளுடன் கிளை ஆட்டும்.

இலைகளில் வாசனையை ஊற்றிக் கொண்டு மாமரங்கள் மாலைகளில் அழைக்கும். மண்ணில் உதிர்ந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல் பூக்களைச் சிதற விட்டு வேப்பமரம் நறுங்காற்று வீசும். மேலே இருந்து கீழே விழுந்தவர்களைப் பற்றிய பயங்களைப் பூசிக் கொண்டு நாவல் மரம் வசீகரிக்கும். கிளையெல்லாம் பச்சைக் கிளிகள் படர்ந்திருப்பது போல் பச்சை நிற இலைகளுடனும், சிவப்பு நிற பழங்களுடனும் ஆலமரம் குருவிகளின் குரலில் ஆலாபனை செய்யும்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தாத்தா பாட்டியையும், கிராமத்தையும் பார்க்க செல்ல முடியாமல் போனது. அப்படியே போனாலும் ஓரிரு நாள்கள் மட்டுமே அங்கு தங்குவேன். காலம் தன் நிலையை மாற்றிக் கொள்ள தாத்தாவின் கூரை வீடும் சரிந்து விழும் அபாயக் கட்டத்தில் இருக்கவே, அவரை சிமெண்ட் தளமமைத்த வீட்டுக்கு மாற்றவேண்டியாயிற்று. அதை இடித்துவிட்டுக் மெத்தைவீடு கட்டி விடலாம் என என் குடும்பத்தார் யோசிக்க, அந்த இடத்தில் அதே வீட்டையே புதுப்பிக்கலாம் என யோசிக்கத் தோன்றுகிறது. கனவும், பொருளாதார தேவையும் என்னை சென்னை நோக்கி விரட்டியடிக்க மாநகரத்துக்குப் பயணமாகி விட்டேன். பாதிக்கு மேல் மெலிந்த தாத்தாவின் தேகம், அரைகுறையான அவரது பார்வை, அழுக்குப்படிந்த வேட்டித் துண்டு என் நெஞ்சுக்குழிக்குள் இன்னும் அழுத்தமாய்.

என்னைப் போல் எத்தனையோ பேர் காலந்தோறும் கிராமத்திலிருந்து நகரத்திற்கும், மாநகரத்திற்கும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பெட்டிகள் முழுக்க கனவுகள். அந்தக் கனவுப் பெட்டியைத் திறக்கும் சாவியைத் தொலைத்துவிட்டு, மாநகரத்து வீதிகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சம் பிழைக்கவும், மேற் கல்விக்காவும், வேலை தேடியும், புகை வண்டியிலும், பேருந்துகளிலும், லாரிகளிலும் வந்தடையும் அவர்களை மாநகரம் சோடியம் விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தால் ஆசீர்வதித்து வரவேற்கிறது. மறுநாள் காலை உருக்கும் சூரிய வெளிச்சம் கண்களைக் கூசச் செய்யும் வரை, மாநகரம் அவர்களுக்கு இனிமையானதாக இருக்கிறது!

3 comments:

நாடோடி இலக்கியன் said...

//எவ்வளவு திட்டமிட்டு தொடங்கினாலும் நம்மையறியாமல் நம் நாள்களின் நிகழ்வுகளை இயற்கையின் கை மாற்றி எழுதுகிறது.//

அருமை..!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

சங்கே முழங்கு said...

:-) நன்றி இலக்கியன்.

"உழவன்" "Uzhavan" said...

காலத்தின் கட்டாயம். நகரங்களை நோக்கி வந்தாலும் மனதினுள் அந்த பழைய கிராம வாழ்க்கை அவ்வப்போது கொசுவத்தியாய் வந்துகொண்டுதான் இருக்கிறது.

Post a Comment