நம்பிக்கை இழந்து கொண்டிருந்த நிறைய நவீன ஓவியர்கள் மத்தியில் தையப் மேத்தாவின் ஓவிய விலை, ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்திய ஓவியங்கள் ஒரு மூலதனமாகவும், பங்கு முதலீடாகவும் உருவாக இவரது ஓவியத்திற்குக் கிட்டிய தொகையும் ஒரு காரணம்.
1925ல் குஜராத்தில் ஒரு குக்கிராமத்தில் 'போரா முஸ்லிம்' குலத்தில் பிறந்தவர் தையப். சினிமாத் துறையில் கலை இயக்குநராக வேண்டும் என்பதே அவர் கனவாக இருந்தது. அதை மெய்ப்பிக்க மும்பையில் உள்ள சர்.ஜே.ஜே. ஓவியப் பள்ளியில் பயின்று 1952ஆம் வருடம் பட்டயம் வாங்கினார். பின்பு லண்டன் சென்று 1959 முதல் 1964 வரை அங்கேயே தங்கிப் பணியாற்றினார். 1968இல் ராக்ஃபெல்லர் ஸ்காலர்ஷிப் பெற்று, அமெரிக்கா சென்றார். 1970இல் கூடல் என்ற மூன்று நிமிடத் திரைப்படத்தை எடுத்தார். இது அவருக்கு ஃபிலிம் ஃபேர் விமர்சகர் விருதைப் பெற்றுத் தந்தது.
கலை என்பது கலைக்காக மட்டுமே (art for art's sake) என்ற நோக்குடனேயே இவரது ஓவியங்கள் இருந்தன. குறைவான உருவங்கள், ஆனால் நிறைவான வண்ணங்கள் என்பதே இவர் அடையாளம். தையப்பின் கோடுகளில் இருக்கும் வேகம், சமுதாயத்தின் மேல் உள்ள கோபங்களைச் சித்தரிப்பது போல் தோன்றும். 1947களில் பிரிவினை நேரத்தே நேர்ந்த ஜாதீயக் கலவரம், அவரது ஓவியத்தின் மையக் கருவாக அமைந்தது. அவர் கண்முன் நடந்த இந்து-முஸ்லிம் கலவரங்கள் அவரை மிகவும் பாதித்தன. அதையே உருவகமாகக் கொண்டு, கட்டுண்ட காளையைப் பல கோணங்களில் வரைந்தார். காளையைப் பற்றி அவர் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார் "நீங்கள் எங்காவது கட்டுண்ட, முடமாக்கப்பட்ட காளையைக் கண்டுள்ளீர்களா? நேரடியாகக் கதை கூறாமல், மறைமுகமாக என்னுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய வன்முறைச் சிதைவுகளைப் பதிக்க நான் கண்ட உருவமே இந்தக் காளை".

எப்படி மஹிஷனை ஒரு கொடூர அரக்கனாகப் புராணங்கள் சித்தரித்ததோ, இவரது மஹிஷனும் 'ஜாதி, சமய அரக்கனை' சித்தரிப்பதாக கொள்ளலாம். ஓர் இஸ்லாமியராகப் பிறந்து இந்து புராணங்களைத் தழுவி மஹிஷனையும், காளியையும் வரைந்து உலக அரங்கில் இந்திய ஓவியத் தரத்தை உயர நிறுத்தியதே, தேசிய ஒருமைப்பாட்டின் சிறந்த அம்சமாகக் கொள்ளலாம். கலையைச் சமயங்களுக்கு அப்பால் கொண்டு சென்ற தையப் மேத்தாவின் மறைவு, இந்திய ஓவியத் துறைக்கு ஈடு செய்ய முடியா இழப்பு. 2007இல் இந்திய அரசு அவரது கலைச் சேவைக்காக பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

No comments:
Post a Comment