Thursday, July 22, 2010

சும்மா கொளுத்தி போடு அம்மோவ்!...

“நீங்கள் எதிர்ப்பார்க்கும் கூட்டணி அமையும்” என்று கோவையில் தனது கட்சியினர் பிரம்மாண்டமாகக் ‘கூட்டிய’க் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகத்தில் மிதக்கவிட்டது மட்டுமின்றி, ஆளும் தி.மு.க. உட்பட பல கட்சிகளின் தலைவர்களை கூட்டணி தொடர்பாக பலமாகச் சிந்திக்கவும் வைத்துள்ளது. திருவாளர் பொதுஜனமும் கூட்டணி எப்படி அமையுமாம் என்று தன் பங்கிற்கு கையில் ஒரு சொத்தை வாக்கை வைத்துக் கொண்டு மற்றவர்களுடன் விவாதித்து வருகிறார்.

‘சும்மா கொளுத்தி போடு’ என்பது போலத்தான் ‘நீங்கள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமையும்’ என்று ஜெயலலிதா கூறியது. ஆனாலும் அவர் கூறிய வார்த்தைகள் அரசியல் தலைவர்களையும், அரசியல் நோக்கர்களையும், பத்திரிக்கையாளர்களையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிகிறது.

ஆளும் கட்சியான தி.மு.க.தான் இதில் பெரிதும் அச்சமுற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில் அவர்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இன்றளவில் காங்கிரஸை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலை. தமிழக சட்டப் பேரவையில் 100 உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் அடுத்த ஓராண்டிற்கு கதை ஓடாது என்பதை அக்கட்சியின் தலைமை நன்கு புரிந்துகொண்டுள்ள காரணத்தினால்தான், கிடைக்கிற மேடைகளில் பேசுகிற காங்கிரஸ் கட்சியின் தமிழகத் ‘தலைவர்கள்’ ஏகத்திற்கு ஏகடியம் பேசியும் தி.மு.க. தலைமை வாயைப் பொத்திக்கொண்டு அமைதி காக்கிறது என்கிறார்கள். அந்த அளவிற்கு கூட்டணி அழுத்தத்தில் இருக்கிறது ஆளும் கட்சியான தி.மு.க.

தி.மு.க.விற்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக்கொண்டால், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் வரும் வரை அந்தக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிக்கக் கூட அ.இ.அ.தி.மு.க. தயாராக இருக்கிறது என்ற பேச்சு டெல்லி வட்டாரத்தில் ஓராண்டிற்கு முன்னரே வலம் வந்தது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு நல்கிட பாட்டாளி மக்கள் கட்சியும் தாயாராக இருந்தது என்றும் கூறப்பட்டது.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி சாத்தியமா?

‘நீங்கள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமையும்’ என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியதன் பொருள் என்ன? இது அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை எழுந்துள்ள கேள்வியாகும். கூட்டணியில்லாமல் ஆட்சியில்லை என்பதை ஜெயலலிதாவைப் போல அக்கட்சியின் தொண்டர்களும் நன்குணர்ந்துள்ளதால், அந்தக் கூட்டணி யாருடன் என்பதற்கு விடை தேட அவர்களும் தங்கள் பங்கிற்கு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.


அந்தக் கூட்டணிக் கட்சி எது? காங்கிரஸா அல்லது ஆரம்பித்த 5 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுப் பலம் வாய்ந்த மூன்றாவது அரசியல் கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிட கழகமா? இந்த இரண்டில் எதோடு கூட்டணி அமைந்தாலும் அது வெற்றிக் கூட்டணிதான் என்பது அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் கருத்து.

அ.இ.அ.தி.மு.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் இடையே கூட்டணி குறித்து தொடர்ந்து பல்வேறு ‘தொடர்பு’களின் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருவதை ஊடுருவிச் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களும், அதே அளவிற்கு ‘தொடர்பு’களைக் கொண்ட அரசியல் நோக்கர்களும் நன்கு அறிவர். ஆனால் இவ்விரு கட்சிகளும் கூட்டணிக்கு வரும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்றே இரு தரப்பினரும் கருதுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் ஒரே காரணம்: ஜெயலலிதா, விஜயகாந்த் இருவருமே பிடிவாத குணம் கொண்டவர்கள் என்பதுதான். நான்தான் முதலமைச்சர் என்பதில் விஜயகாந்தின் பிடிவாதம் இக்கூட்டணித் தொடர்பான பேச்சுகளை முதற்கட்டத்தைத் தாண்டி நகர்த்த முடியாமல் தடுக்கிறது. இது முன்பிருந்த நிலை.

இப்போது விஜயகாந்தின் நிலை சற்று தளர்ந்துள்ளதாகவும் அந்தத் ‘தொடர்’புகள் கூறுகின்றன. வெற்றிக்குத் தேவை கூட்டணி என்பதை அவர் உணர்ந்துள்ளார். ஆனால் கணிசமான தொகுதிகளை தே.மு.தி.க.விற்கு வழங்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடிப்படையாக அவர்கள் கூறுவது: நாங்கள் சேரும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும் என்பது. அதற்கு விலை? குறைந்தது 100 தொகுதிகள்! இந்தப் பேரமும் முதற்கட்டத்தை தாண்டி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியாமல் தடுத்துவிடுகிறதாம். ஆனால், தே.மு.தி.க. கட்சி வட்டாரங்கள் இதனை நியாயமான பேரம் என்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: கூட்டணி அமைந்தால் 50 முதல் 60 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெரும் அளவிற்கு கட்சி + வேட்பாளர் பலம் தே.மு.தி.க.விற்கு உள்ளது. கூட்டணி பலத்தில் மேலும் 40 தொகுதிகள் என்பது எட்டாக்கனியல்ல, ஆகவே தங்கள் தலைவர் விஜயகாந்தின் பேரம் நியாயமானதே என்று கூறுகின்றனர்.


இதில் அ.இ.அ.தி.மு.க. கணக்கு என்ன? என்றறிய சுற்றிவந்தபோது கிடைத்த பதில்: அதிகபட்சமாக 60 முதல் 70 தொகுதிகள். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாத நிலையில் தே.மு.தி.க.வுடனான கூட்டணி நிச்சயம் தன்னை ஆட்சியில் அமர்த்திவிடும் என்பதில் உறுதியாக உள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தே.மு.தி.க.விற்கு 70 இடங்கள் கொடுத்தாலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மறுமலர்ச்சி தி.மு.க. ஆகியவற்றிற்கு 25 முதல் 30 தொகுதிகளை பகிர்ந்தளித்துவிட்டு, மீதமுள்ள 130 முதல் 135 தொகுதிகளில் போட்டியிட்டாலும், பலமான கூட்டணி அமைவதால் பெரும்பான்மை கூட சாத்தியமே என்று அ.இ.அ.தி.மு.க. தலைமை கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது. இது 2001ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டிய கணக்காகும். அந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று மெகா கூட்டணி அமைத்த அ.இ.அ.தி.மு.க. 142 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் 133 (ஒரு சுயேட்சையின் ஆதரவையும் சேர்த்து) இடங்களில் வெற்றி பெற்று அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அந்தக் கணக்கே இப்போதும் ஓடுவதாக கூறப்படுகிறது.

இந்த அளவிற்கு தே.மு.தி.க.விற்கு முக்கியத்துவம் அளித்து அ.இ.அ.தி.மு.க. தலைமை சிந்திப்பதற்குக் காரணம், தி.மு.க.வை கழற்றி விட்டுவிட்டு தங்கள் பக்கம் காங்கிரஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்பதே.

ஆனால் 60 முதல் 70 இடங்களுக்கு தே.மு.தி.க. ஒப்புக்கொள்ளுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இக்கட்டுரை வெளியாகும் இந்த நேரத்திலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஆயினும் இன்று நேற்றல்ல, கடந்த ஆண்டு முதலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜயகாந்தை ‘தங்கள்’ கூட்டணிக்குள் இழுக்க ‘பாகீரத பிரயர்தனம்’ செய்து வருவது அரசியல் வட்டாரங்கள் நன்கு அறிந்த இரகசியமாகும்.

தி.மு.க.வை கழற்றி விடுமா காங்கிரஸ்?

இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் சிந்திக்கத்தக்கவை:


1) மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 200 இடங்களே உள்ள நிலையில், அதன் இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. ஒன்று 19 இடங்களைக் கொண்ட திருணாமுல் காங்கிரஸின் ஆதரவு, மற்றொன்று தி.மு.க.வின் 19 (18 + திருமாவளவன்) ஆதரவு.

2) இதில் திருணாமுல் காங்கிரஸ் உறவு அந்த அளவிற்கு பலமானதாக இல்லை (இன்று அந்த நிலை மாறியுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்துள்ளார்), ஆனால் தி.மு.க.ஆதரவு நிச்சயமானதாக உள்ளது. அதனால்தான் ஸ்பெக்டரம் ஊழல் குற்றச்சாற்று பெரிதாக எழுந்த நிலையிலும் அது தி.மு.க. உறவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. அமைச்சர் இராசா மீது நடவடிக்கை எதையும் எடுக்காமல் தவிர்த்தது.

3) தி.மு.க.வை விட்டுவிட்டு அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் 9 மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமின்றி, தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க. உறவு நம்பத்தக்கதாக காங்கிரஸ் தலைமை நினைக்கவில்லை.

4) சரத் பவாரின் தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விட தி.மு.க.வின் ஆதரவு உறுதியானது என்பதும், மத்தியில் இன்னமும் 4 ஆண்டுகளுக்கு ஆட்சிக்காலம் இருப்பதால், தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தேர்தலிற்காக மத்திய ஆட்சியின் பலத்தை ஆபத்திற்குள்ளாக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை.

5) தே.மு.தி.க.வை ‘எப்படியாவது’ தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி கண்ணும் கருத்துமாக உள்ளது. ஆனால் அதற்காக அது தி.மு.க.வை கழற்றிவிடத் தயாரில்லை. தே.மு.தி.க. கூட்டணிக்குள் வருவதை தி.மு.க. தலைவரும் விரும்புகிறார். அந்தப் பக்கம் போவதை விட நம்ம பக்கம் வைத்துக்கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் முழு வெற்றியை உறுதி செய்துக் கொள்ளலாம் என்பது தி.மு.க. தலைவரின் எண்ணமாக உள்ளது.

ஆக, தி.மு.க.வை கழற்றி விட்டுவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் வாய்ப்பு, இன்றைய நிலையில், முற்றிலும் இல்லை.

தனது முதலமைச்சர் ஆகும் கனவு இலக்கை இப்போதைக்கு மறந்துவிட்டு, சட்டப் பேரவையில் ஒரு பலமான கட்சியாக அமர்வதை முக்கியமானதாக விஜயகாந்த் கருதினால் அ.இ.அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீட்டின் அடிப்படையில் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. இது அவ்வளவு சாதாரணமாக நடந்தேறிவிடாது. கடுமையான பேரம் நடக்கும்.

காங்கிரஸே மாப்பிள்ளை!


ஜெயலலிதா கிளப்பிவிட்ட எதிர்ப்பார்த்த கூட்டணி பேச்சால் பெரும் பயன் அடையப்போவது காங்கிரஸே. ஜெயலலிதா தங்களை வரவேற்கத் தயாராக உள்ளதைக் காட்டி, சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கப் போகும் கட்சி நாங்களே என்று கூறி, தங்களது தொகுதி பேர பலத்தை காங்கிரஸ் கட்சி அதிகரித்துக்கொள்ளும். கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இப்போது 60 முதல் 70 தொகுதிகளைக் கேட்கும். காங்கிரஸை தனது கூட்டணியில் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க. தலைமையும் சற்றேறக்குறைய அந்த அளவிற்கு விட்டுத் தரும் வாய்ப்பும் உள்ளது. இந்தத் தொகுதி பேரம் டெல்லியில் விரைவில் நடந்து முடியும். தி.மு.க. + காங்கிரஸ் + பா.ம.க. + விடுதலை சிறுத்தைகள் கூட்டணி உறுதியாகும்.

உள் அரசியல்!

தங்களோடு கூட்டணி அமைத்துக்கொள்ளத் துடிக்கும் தே.மு.தி.க.வை காங்கிரஸ் என்ன செய்யும்? அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிடுமாறு ஆலோசனைக் கூறும் என்றும், தி.மு.க. கூட்டணியில் தாங்கள் பெறும் இடங்களுக்கு இணையாக அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் கணிசமான இடங்களைப் பெற்று போட்டியிட வேண்டும் என்றும் கூறும். சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையற்ற ஒரு நிலையை உண்டாக்கினால், அப்போது இரு கட்சிகளும் இணைந்து, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஒரு கூட்டணி அரசு அமைக்கும் வாய்ப்பு கிட்டலாம், அப்போது... தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் 40 ஆண்டுக்கால கனவு நிறைவேறலாம். காங்கிரஸ் + தே.மு.தி.க. + பா.ம.க. என்ற புதிய அணி தமிழ்நாட்டில் பிறக்கலாம்.

இப்படியும் ஒரு கணக்கு உள்ளது, இங்கும் டெல்லியிலும். இதனை 60 ஆண்டுக்கால அரசியல் முதிர்ச்சி பெற்ற தி.மு.க. தலைமையும் அறிந்தே உள்ளது.

பின்குறிப்பு: மக்கள் நலன், அத்‌தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், தமிழ்நாட்டின் நதி நீர்ப் பிரச்சனைகள், ஈழத் தமிழர் பிரச்சனை என்று மக்கள் மனதை வாட்டும் பிரச்சனைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டணிகள் அமையாதா என்று யாரும் ஏங்க வேண்டாம். இந்தப் பிரச்சனைகளெல்லாம் தேர்தலுக்கானவை அல்ல. தேர்தலிற்குத் தேவை கூட்டும் துட்டும்தான். இரண்டாவதைத்தான் அள்ளித் தருவார்களே... அப்புறமென்ன?

நன்றி: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1007/22/1100722036_1.htm