Friday, September 18, 2009

சாம்பியன்ஸ் கோப்பை - ஓர் அலசல்

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமையன்று (செப்டம்பர் 22ஆம் தேதி) அனைவரும் ஆவலுடன் எதிர்பாக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்குகின்றன. செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் செஞ்சூரியன் மைதானத்தில் (பகலிரவு ஆட்டத்தில்) மோதுகிறது.

செப்டம்பர் 22ஆம் தேதி துவக்க போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இரண்டு அணிகளான தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும், செஞ்சூரியன் மைதானத்தில் பகலிரவு போட்டியில் மோதுகிறது.

செப்டம்பர் 28ஆம் தேதி இந்தியா மீண்டும் பலமான ஆஸ்ட்ரேலியாவை செஞ்சூரியம் மைதானத்தில் பகலிரவு ஆட்டத்தில் சந்திக்கிறது. பிறகு 30ஆம் தேதி இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் மீண்டும் பகலிரவு ஆட்டத்தில் மோதுகிறது.

இந்திய அணி பிரிவு ஏ-யில் மிகவும் பலமான அணிகளுடன் மோதவுள்ளதால் அதுவும் ஒரு முறை மட்டுமே மோதவுள்ளதால், அன்றைய தினத்தில் திறமையை கூடுதலாக வெளிப்படுத்தும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இது போன்ற வடிவத்தில் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிரச்சனைதான். இந்த முறை மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் மேற்கொண்டுள்ளதால் அவர்களை நீக்கி விட்டு அனுபவமற்ற இரண்டாம் நிலை அணியை சாம்பியன்ஸ் கோப்பைக்கு அனுப்புகிறது மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம். இதே அணி வங்கதேசத்திடம் 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வி தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய அணிக்கு மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் மேற்கிந்திய அணி மட்டுமே சற்றே எளிதானது. மற்ற இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற கடும் போட்டி நிலவும். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா மூன்று அணிகளுமே மேற்கிந்திய அணியை வென்று விடும் பட்சத்தில் 3 அணிகளும் ஒரு போட்டியில் தோல்வி அடைகிறது என்றால் மூன்று அணிகளும் புள்ளிகள் கணக்கில் சமமாக திகழும். அப்போது நிகர ரன் விகித அடிப்படையில் முதலிரண்டு இடங்கள் முடிவு செய்யப்படும்.

இதனால் கணக்கீட்டு சவால்களையும் எதிர்கொள்ளவேண்டி வரும்.

2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா இந்த சிரமங்களை அமைப்பாளர்களுக்கு கொடுக்கவில்லை. இங்கிலாந்தை தடுமாறி வென்று, பிறகு ஆஸ்ட்ரேலியாவிடமும், மேற்கிந்திய அணியிடமும் தோல்வி தழுவியது. இதனால் வெளியேறியது.

இந்திய அணிக்கு 'உலக மகா' கிரெக் சாப்பல் பயிற்சியாளர். அப்போது திராவிட் அணியின் கேப்டன்.

இந்த முறை இந்திய அணியின் முக்கிய பலவீனம் சாம்பியன் கோப்பை போட்டிகளில் 72 ரன் என்ற அதிகபட்ச சராசரி வைத்துள்ள சௌரவ் கங்கூலி இல்லாதது. அனைத்திற்கும் மேலாக அதிரடி துவக்கம் தந்து எதிரணியினரை கதி கலங்கச் செய்யும் சேவாக் இல்லாதது நிச்சயம் அனைவராலும் உணரப்படும். அதே போல் ஜாகீர் கான் காயமடைவதற்கு முன்னால் வீசி வந்த அபார பந்து வீச்சும் இந்திய அணிக்கு இந்த முறை இல்லை. கடந்த சாம்பியன் கோப்பை போட்டியின் போது திருவாளர் கிரெக் சாப்பலின் கைங்கரியத்தால் ஜாகீர் கான் அணியிலேயே இல்லை!

தற்போதுள்ள இந்திய அணியில் சாம்பியன் கோப்பையில் அதிக சராசரி வைத்திருப்பவர் திராவிட் மட்டுமே, இவர் 49.02 என்ற சராசரியை பராமரித்து வருகிறார்.

ஒரு நாள் போட்டிகளில் தற்போது அதிக சராசரி வைத்திருப்பவர் தோனி, மேலும் அவர் ஐ.சி.சி. தர வரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தை தக்கவைத்து வருகிறார்!

சச்சின், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியில் சாம்பியன் கோப்பை போட்டிகளில் அதிகம் பங்கேற்ற அனுபவம் மிக்க வீரர்கள். மற்றபடி இந்த அணி புதிய அணியே.

இந்திய அணியில் இந்த முறை திராவிடின் வருகை புதிய பலம் சேர்த்தாலும், அதிக ரன்களைத் துரத்த நேரிடும்போது அவரது பங்கு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பீல்டிங்கே பிரச்சனை!
இலங்கையில் நடைபெற்ற காம்பேக் கோப்பை இறுதிப் போட்டியில் சச்சினுடன், திராவிடை துவக்கத்தில் களமிறக்கிய தோனி, திராவிடை பயன்படுத்துவதில் ஒரு புதிய அணுகுமுறையை கடைபிடித்தார். ஆனால் கம்பீர் உள்ளே வருகிறார் என்றால் திராவிட் மீண்டும் 3ஆம் நிலையில் களமிறங்கவே வாய்ப்பிருக்கிறது.

தற்போது இந்திய அணியின் பிரச்சனை என்னவெனில். மோசமான பந்து வீச்சு மற்றும் மோசமான ஃபீல்டிங்.

இதனால் ஒரு நல்ல அணியை தேர்வு செய்வதில், அதாவது ஒரு சமத்திறனான அணியைத் தேர்வு செய்வதுதான் தோனியின் திறமைக்கு உள்ள சவால்.

உதாரணமாக, சச்சின், கம்பீர், திராவிட், ரெய்னா, யுவ்ராஜ். தோனி என்று 6 பேட்ஸ்மென்களையும், ஹர்பஜன்சிங், இஷாந்த் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங் மற்றும் கூடுதல் ஸ்பின்னராக அமித் மிஷ்ரா என்ற அணிச் சேர்க்கை பலனளிக்கும்.

ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவர் சொதப்பும்போதும் 4 மற்ற முக்கிய வீச்சாளர்கள் பக்க பலமாக இருப்பர். சொதப்பும் பந்து வீச்சாளரின் மீதி ஓவர்களை யுவ்ராஜ் சிங், ரைனா ஆகியோரை வைத்து ஓரளவிற்கு சமாளிக்கலாம்.

இந்த அணிச் சேர்க்கையல்லாது 7 பேட்ஸ்மென்கள் என்று வைத்துக் கொண்டால், அணியில் ஒன்று யூசுஃப் பத்தான் இடம்பெற வேண்டும் அல்லது மும்பை அதிரடி மன்னன் அபிஷேக் நாயர் இடம்பெறவேண்டும். இருவரும் ஆல் ரவுண்டர்கள் என்றாலும் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.

4 முறையான பந்து வீச்சாளர்கள் யார் யார்? இஷாந்த் ஷர்மா, ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங் என்று வைத்துக் கொண்டால். வேகப்பந்து வீச்சாளர் ஒருவரோ அல்லது இருவரோ மோசமாக வீசுகிறார் என்றால், 20 ஓவர்களை பகுதி நேர பந்து வீச்சாளர்களை வைத்து ஈடு கட்ட முடியாது. ஏதோ ஒரு போட்டியில் இது பயனளிக்கலாம் ஆனால் நிரந்தர தீர்வாகாது.

எனவே 6 பேட்ஸ்மென்கள், 5 முறையான பந்து வீச்சாளர்களை அணியில் வைத்துக் கொண்டு இதில் ஒரு பந்து வீச்சாளர் சரியாக வீசவில்லையெனில் அடுத்த போட்டிக்குன் யூசுப் பத்தானையோ, அபிஷேக் நாயரையோ ஆல்ரவுண்டர் என்ற முறையில் அணியில் சேர்த்துக் கொள்ளலாம். எனவே இந்திய அணி இந்த இரண்டு அணிச் சேர்க்கையில் எதை தேர்வு செய்கிறது என்பது வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும்.

போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால், பந்து வீச்சிற்கு ஓரளவிற்கு சாதகமான ஆட்டக்களம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இடத்தில் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருப்பது தேவையற்ற ஒரு தேர்வாக படுகிறது.

அந்த இடத்தில் இர்ஃபான் பத்தான், முனாஃப் படேல் அல்லது பிராக்யன் ஓஜா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்திருக்கலாம். ஏனெனில் பிராக்யன் ஓஜா தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசினார். அவர் விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர். ரன்களைக் கட்டுப்படுத்தும் வீச்சாளர் மட்டுமல்ல.

அதே போல் தோனி தொடர்ந்து ஆர்.பி.சிங்கிற்கு அளித்து வரும் முக்கியத்துவமும் கேள்வி எழுப்புவதாயுள்ளது. பிரவீண் குமாரை பயன்படுத்த தயங்குகிறார். பிரவீண் குமார்தான் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் இறுதி போட்டியில் இரண்டு முறை அதிரடி மன்னன் கில்கிறிஸ்டை வீழ்த்தினார்.

அதன் பிறகு இலங்கையில் ஜெயசூரியாவை தொடர்ந்து வீழ்த்தினார். ஆனால் இலங்கையில் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் தொடர்ந்து ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றாத ஆர்.பி.சிங்கிற்கு வாய்ப்பளிக்கிறார் தோனி.

இந்திய அணியின் பேட்டிங் பிரமாதமாக உள்ளது. இந்தியா ஏதாவது போட்டியை வெல்கிறது என்றால் அது பேட்டிங்கினால்தான் இருக்கும் என்ற அளவுக்கு பலமான பேட்டிங் வரிசை உள்ளது. கங்கூலியின் தலைமையிலும் இப்படித்தான் இருந்தது.

ஆஸ்ட்ரேலியாவும் பாகிஸ்தானும் அன்றைய தினத்தில் என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கான் இந்தியாவை வீழ்த்துவதுதான் சாம்பியன் கோப்பையை வெல்வதை விட மிக முக்கியமானது என்று பேசி வருகிறார்.

உமர் குல் அச்சுறுத்தல்!
மியாண்டட், இந்திய கிரிக்கெட் வாரியம் எவ்வாறு பாகிஸ்தானை தொடர்ந்து சர்வதேச கிரிகெட்டிலிருந்து ஒழித்து வருகிறது என்று பாகிஸ்தா‌ன் வீரர்களை நிச்சயம் உசுப்பேற்றுவார். இதனால் இந்தியாவை வெல்ல அந்த அணி கடுமையாக திட்டங்களைத் தீட்டும், ஆனால் இதுவே அந்த அணியின் வீழ்ச்சியாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தோல்வி பயம் தோல்விக்குத்தான் இட்டுச் செல்லும். இதே தோல்வி பயம் இந்திய ரசிகர்களுக்குத்தான் உள்ளது. தற்போதைய இந்திய வீரர்களிடம் இல்லை.

மேலும் பந்து வீச்சில் அஃப்ரீடி, உமர் குல், ஆசிஃப், சயீத் அஜ்மல், ரானா நவேத் என்று அந்த அணி பலமாக உள்ளது. மேலும் இம்ரான் நசீரின் வரவு, உமர் அக்மல் என்ற இளம் அதிரடி வீரரின் சமீபத்திய அபார ஆட்டம், யூனிஸ் கானின் பேட்டிங், அஃப்ரீடியின் சமீபகால பொறுப்பான பேட்டிங் என்று அந்த அணியின் பலம் சிறப்பாகவே உள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணியில் பிரட் லீ சமீபமாக வீசி வரும் யார்க்கர்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலே. வாட்சன், மைக்கேல் கிளார்க், கேமரூன் ஒயிட், ரிக்கி பாண்டிங் ஆகியோரது பேட்டிங்கும் அபாரமாக உள்ளது. ஃபீல்டிங்கில் அந்த அணியை அடித்துக் கொள்ள முடியாது.

ஃபீல்டிங் பலவீனம் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கே உரித்தானது. அரையிறுதிக்கு இந்தியா முன்னேறி விட்டால் அதன்பிறகு இந்தியாவின் ஆட்டம் வேறுமாதிரியாக இருக்கும். வெற்றிக்கான புதிய உத்வேகம் அணியை நகர்த்திச் செல்லும்.

அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிற்கு பகலிரவு ஆட்டமாக இருப்பதால் பூவா தலையா வெற்றி தோல்வியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். எது எப்படியிருந்தாலும் இந்தியாவிற்கு அரையிறுதியில் நுழையவேண்டும் என்ற அழுத்தமும் அதை விட மேலாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற அழுத்தமும் ஆதிக்கம் செலுத்தலாம்.

இந்த அழுத்தங்களை மன ரீதியாக, ஆட்டத் திறன் ரீதியாக இந்திய வீரர்கள் முறியடித்தால், சாம்பியன் கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் உள்ள ஒரு அணி இந்திய அணி என்று உறுதியாக கூற முடியும்.

Monday, September 7, 2009

முதியோரை மதிக்காத வீடும் நாடும் என்னவாகும்?

தான் கனவு காணும் இந்தியா குறித்து காந்தி அடிகள் இப்படிச் சொன்னார்: "நாட்டின் கடைக்கோடி ஏழை இந்நாட்டை தன்னுடைய நாடு என்று கருத வேண்டும்; அப்படிப்பட்ட தேசமாக இந்தியா திகழ வேண்டும்"

இந்திய அரசியல்வாதிகளுக்கும் மகாத்மா காந்தியின் கனவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனாலும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் 45.58 கோடிப் பேர் வாழும் ஒரு தேசத்தில் ஏழைகளைத் தவிர்த்த அரசியல் சாத்தியமானதில்லை என்பதாலேயே இந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்காக ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. என்ன பயன்? அரசியல்வாதிகள் அசைந்துகொடுத்தாலும் அதிகார வர்க்கத்தின் சிகப்பு நாடாக்களில் சிக்கிக் கழுத்தறுபடுகின்றன அரசுத் திட்டங்கள்.

நாட்டின் மூத்தகுடிமக்களுக்கு முன்னுரிமை, சலுகைகளை அளிப்பது உலகெங்கும் உள்ள ஒரு நடைமுறை. மக்கள் நல அரசுகளுக்கு அது ஒரு கடப்பாடும்கூட. இந்தியாவில் மூத்தகுடிமக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவையும்கூட படித்த - ஓரளவுக்கேனும் வசதியுடையவர்கள் அடையக்கூடியவையாகவே இருக்கின்றன.

இந்நிலையில், வறுமை ஒழிப்புத் திட்டங்களில் ஒன்றாக வசதியற்ற மூத்தகுடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம். சொத்துகள் ஏதுமற்ற, வருமானத்துக்கு வழியில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ரூ. 400 ஓய்வூதியம் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.

மாதம் ரூ. 400-ஐ மட்டுமே வருமானமாகக் கொண்டு இந்தக் காலத்தில் ஒருவர் - அதுவும் ஒரு முதியவர் வாழ்க்கையைக் கடத்திவிட முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விதான். ஆனாலும், நம்முடைய அரசு இந்நாட்டு ஏழைகளுக்கென்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி வைத்திருக்கிறது. ரேஷன் கடைகளில் ரூ. 1 அல்லது ரூ. 2 விலையில் ஒரு கிலோ அரிசி, மலிவு விலை மண்ணெண்ணெய், மளிகைப் பொருள்கள், பண்டிகையையொட்டியோ, அரசியல் தலைவர்கள் பிறந்த நாளையொட்டியோ ஆண்டுக்கொரு முறை வழங்கப்படும் இலவச வேஷ்டி - சேலை, நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனை என்று அந்த வாழ்க்கை முறை விதிக்கப்பட்டவர்களுக்கு இன்றைக்கும் ரூ. 400 குறிப்பிடத்தக்க ஒரு தொகையாகவே இருக்கிறது.

தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்திலுள்ள ஒரு நல்ல விஷயம், ஓர் ஊரில் அல்லது ஒரு மாவட்டத்தில் அதிகபட்சம் இத்தனை பேரைத்தான் இத்திட்டத்தில் சேர்க்கலாம் என்ற வரையறை ஏதும் கிடையாது என்பதாகும். ஆகையால், வருமானத்துக்கு வாய்ப்பற்ற 65 வயதைக் கடந்த இந்நாட்டு மூத்தகுடிமக்கள் அனைவருக்குமே இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கலாம். ஆனால், இத்திட்டத்தில் சேர அதிகார வர்க்கம் உருவாக்கியுள்ள நடைமுறை தன்மானமுள்ள எவரையும் தலைகுனியவைப்பதாக அமைந்திருக்கிறது. ஒரு முதியவர் இத்திட்டத்தில் சேர விரும்பினால், அதற்கு விண்ணப்பத்தில் கீழ்காணும் உறுதிகளை அளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்.

"ஐயா, எனக்கு 65 வயதாகிவிட்டது. நான் ஓர் அனாதை. எனக்குச் சொத்துகள் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. நான் பிச்சை எடுக்கவில்லை. ஆனால், அதரவற்ற நான், இன்னார் வீட்டுத் திண்ணையில் தங்கி அருகிலிருப்போர் தரும் உணவை உண்டு வாழ்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவித்தொகை அளியுங்கள்."

அதாவது, "நான் தெருவில் அமர்ந்து பிச்சை எடுக்கவில்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பிச்சையாகத் தரப்படும் உணவை உண்டு வாழ்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லச் சொல்கிறார்கள் அதிகாரிகள். தொடர்ந்து, விண்ணப்பிப்பவரின் இந்த வாக்கியங்களையே வருவாய்த் துறை அலுவலர்கள் சான்றாகத் தருவார்கள். அதன் பின்னரே உதவித்தொகை. முரண்பாடுகள் மிக்க, மிக அபத்தமான ஒரு நடைமுறை இது. ஓர் அரசாங்கம் தன்னிடம் உதவி கேட்டு வரும் தன்னுடைய மூத்தகுடிமக்களை இதற்கு மேல் இழிவுபடுத்த முடியுமா என்று தெரியவில்லை.

உண்மையில் இத்திட்டத்தில் சேருவதற்கு அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு வேலையே இல்லை. ஆனால், பயனாளி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையைப் பயன்படுத்தி இத்தகைய அவலத்தை அரங்கேற்றி வருகிறார்கள் அதிகாரிகள். இந்தியாவைப் பொறுத்த அளவில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பான்மையினர் விவசாயக் கூலித் தொழிலாளிகள்தான். நம் நாட்டில் பிச்சை எடுப்பவர்களில் பெரும்பான்மையினரும் இவர்களே. நாட்டுக்கே உணவிட்டவர்கள் ஒரு வேளை சோற்றுக்குக் கையேந்தும் நிலை ஏற்பட்டது நாட்டை வழிநடத்துபவர்கள் செய்யும் தவறுகளால் ஏற்பட்ட விளைவு. இந்தத் தவறுகளில் அதிகார வர்க்கத்துக்கும் பெரும் பங்குண்டு.

குறைந்தபட்சம் இந்தப் பாவத்துக்கான பரிகாரமாகவேனும் அதிகாரிகள் இத்தகைய மோசமான நடைமுறைகளைக் கைவிட வேண்டும். முதியோரை மதிக்காத வீடும் நாடும் என்னவாகும் என்று வரலாற்றையோ, புராணத்தையோ படித்தாவது தெரிந்துகொள்ள வேண்டும்!