Tuesday, January 12, 2010

பொங்காத பொங்கல்!

பொங்கலோ பொங்கல் என்றந் நாளில்
பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில்
இந்நாள்

பொங்கலா பொங்கல் வந்து போகட்டும்
எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே
வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம்
தாங்கும் நிலையில் தமிழர் உளரோ?
காய்கறி விலையோ கைக்குள் இல்லை
வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில்
வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில்

ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும்
அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும்
எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர்
எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம்
காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி
தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள்

தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை
தமிழ்நாட் டலுவலர் ஒப்பத்தில் தமிழில்லை
தமிழ்நாட்டுக் கோவிலில் தழைக்கும் தமிழில்லை
தமிழன் தமிழ்ஆங்கிலம் கலந்து பேசலால்
தமிழன் பேச்சை "தமிங்கிலம்" என்றார்
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்
பிழைக்க வந்தோர்மொழிப் பிதற்றல் பெரிதுண்டு
குழைக்கும் குழந்தைநா அம்மை அப்பரை
"மம்மிடாடி" என்றே மயங்கி அழைக்கிறது

கும்மிருட்டில் தமிழர் வாழ்வைக் கொட்டுகின்றார்
கோட்டையில் கோலோச்சத் தமிழில்லை தமிழர்
நாட்டுக் கடைப்பெயரில் தமிழில்லை தமிழர்
வீட்டுஅடுப் பறைவரை வேற்றுமொழி ஆட்சி
மீட்டும் தமிழே வேண்டும் வேட்பினரே
வாட்டிப் பூட்டும் வன்தமிழர் ஆட்சி
நாட்டில் ஒளிபரப்பி நன்றாய்க் கொழுத்த
கதிர்தொலைக் காட்சி தமிழன் கண்டதாம்!

அதுதமிழை மிதிக்கும் ஆங்கிலத்தில் மிதக்கும்
தமிழாய்ந்த தமிழன் பெயர்த்தொலைக் காட்சியில்
உமிழத்தகும் காட்சிகள் உலாவரும் ஆட்சி
பணம்பண்ண வந்தால் பண்பாடா தமிழா
பணப்பண் பாடலே பண்பாடா குமென்பர்
மானோடக் கண்டுளேன் மானாடக் கண்டிலேன்
மானாட மயிலாடக் காண விரும்பின்
கலைஞர் தொ.கா.வில் கண்கூசக் காணலாம்
கலைபண் பாடுஇவை களைந்தமிழில் காணின்
நிலைஉளத்தர் நிலைகுலைவர் நிலைத்த உண்மையாம்
என்னைச் சில்லோர் இதுகாண்க என்றனர்
கண்களை உறுத்தின கவன்று நிறுத்தினேன்

எம்மொழி எம்மினம் எப்படி அழிந்திடினும்
செம்மொழி மாநாடெனச் சித்து விளையாடலாம்
இந்தியும் இத்தாலியும் ஈழ மக்களைக்
கொந்திக் குதறிய கொலைவன் கொடுமையைச்
சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பினில்
நட்டபட்டு நடிக்கலாம் நாட்டு மக்களைத்
திட்டமிட்டுத் திசைதிருப் பலாம்ஈழ மக்களை
வட்டமிட்டு வளைத்துக் கொத்துக் குண்டுகளால்
சுட்டுத் தீய்த்த சொல்லொணாக் கொடுமையைத்
தொட்டவர் உள்ளமெலாம் துமிக்கிக் குண்டுகள்

முள்ளி வாய்க்காலில் முடிந்தது தொடக்கமே
முள்ளி வாய்க்கால் முழுமூடச் சிங்களர்க்குக்
கொள்ளி வாய்க்கால் கூடிய விரைவில்
உள்ளம் உள்ளவர் உள்ளம் வேகுமே
முள்வேலிக் குள்ளே முடங்கிப் புழுங்கி
உள்ளோம் உள்ளம் உலைக்கலம் ஒக்குமே
நூறா யிரவரை நூழிலாட் டியவனை
சீறிச் சீரழிக்கும் செய்கை தேர்வர்

எல்லாளன் நாட்டின் எழிலுரு அழித்த
பொல்லா இந்தியும் இத்தாலியும் பொசுங்கும்
எல்லா இழப்புக்கும் கையொடு கைகோர்த்த
நல்ல நடப்பிலா நயவஞ்சர் நைந்த‌‌ழிவர்
ஈழ விடியலில் எழிந்திடும் தமிழகம்
வேழம் நிகர்த்த வெல்மறவர் களங்காண்பர்
பொய்யிலாப் புலவன்யான் புகன்றவை யெல்லாம்
பொய்த்தல் இல்லை புவியுளீர் காண்பீர்

நன்றி: புலவர் கி.த.பச்சையப்பன்
http://tamil.webdunia.com/miscellaneous/special/pongal/1001/12/1100112082_1.htm

Monday, January 11, 2010

கலித்தொகையும், குறுந்தொகையும், பரிபாடலும்...........

தன் எதிரே அமர்ந்திருந்த அஞ்சுகத்தைப் பார்க்கப் பார்க்க, சுந்தரிக்கு பற்றிக் கொண்டு வந்தது கோபம். சொந்தக் குழந்தையாயிருந்தால் இழுத்து வைத்து நாலு அறையாவது கொடுத்திருப்பாள். இது அருமைத் தோழியின் ரொம்ப அருமையான குழந்தை. மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாத, தர்ம சங்கடமான நிலை.

இத்தனைக்கும் ஒரு வாண்டு, இந்த மொட்டுக் குட்டிக்கு இத்தனை அடமா? எங்கே கோளாறு? ஏனிந்தக் குழந்தைக்குத்தமிழ் மொழியில் மட்டும் இத்தனை வீம்பு? கோடி காட்டினாலே, கற்பூரம் போல் பற்றிக்கொள்ளும் நல்லறிவும் ஆற்றலும் இருந்தும், பற்றிக்கொள்ள ஏன் மறுக்கிறாள்? சுந்தரிக்கு உண்மையிலேயே அஞ்சுகம் ஒரு சவாலாகவே இருந்தாள்..

சென்ற வாரம் மணிமேகலை, அஞ்சுகம் விஷயமாக உதவி கேட்டபோது, சிரிப்புத்தான் வந்தது. உயர் நிலை நான்கு மாணவிகளுக்கும் கல்லூரி மாணவிகட்கும், இவள் துணைப்பாட வகுப்பு, [டியூஷன்] கற்பித்துள்ளது உணமையே. ஆனால், இவ்வளவு சின்னக் குழந்தைக்கு, அதுவும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு கற்பித்த அனுபவமே இல்லையே. ஆனால் மணிமேகலையின் கண்ணீரைக் கண்ட போது பாவமாகவும் இருந்தது.

கணவன், மனைவி, இருவருமே பட்டதாரிகள் தான் எனினும், சொந்தக் குழந்தைகள் தான் எப்பொழுதுமே பெற்றோர்களிடம் படிக்க மாட்டார்கள் என்பதும் அறிந்த உண்மை தானே. அதனால் தான் வேறு வழியின்றி, தோழிக்கு உதவுவதாக ஏற்றுக் கொண்டாள்.

ஆனால், அது கடப்பாறையை விழுங்கி சுக்குக் கஷாயம் குடிப்பது போல் எவ்வளவு பெரிய பிரச்சினை என்பதை, அஞ்சுகத்துக்குக் கற்பிக்கத் தொடங்கிய பிறகுதான் தெரிந்தது. பாடல் என்றால் ரொம்ப பிரியமாக அஞ்சுகம் பிடித்துக் கொள்வதை அறிந்த சுந்தரி, முதல் இரண்டு வாரத்துக்கு, தன்னுடைய சொந்தக் கவிதைகள் சிலவற்றைப் பாடலாகக் கற்பித்தாள்.. பொன்னே., பூவே, சின்னக் கண்ணம்மா,, என்ற வரிகளில் குழந்தை மகிழ்ந்து பாடுவது ரசனையாகவே இருந்தது. அதே ரசனையோடு பள்ளி சிலபசுக்கு வந்தபோது மட்டும் அஞ்சுகம் முரண்டு பிடித்தாள்.

அ - அம்மா
ஆ - ஆடு,
இ - இலை

என்று கடகடவென்று அஞ்சுகம் ஒப்பிப்பது, ஏதோ கொயினா மருந்தைக் கஷ்டப்பட்டு, விழுங்கித் தொலைப்பது போல்தான் புலப்பட்டது.. சரி. வீட்டுப் பாடம் கொடுத்தாலாவது செய்கிறாளா என்று பார்க்கலாமே என்றால், கம்பளிப் பூச்சியைப் போல், கையெழுத்தைக் கிறுக்கிக் கொண்டு வந்தாள். பயிற்சிப் பாடமோ பூர்த்தியாக்கப்படுவதே இல்லை.

இத்தனைக்கும் ஆங்கிலத்தில், கணிதத்தில் எல்லாம் 96, 98 மதிப்பெண் வாங்கும், அறிவுள்ள குழந்தை அஞ்சுகம் என அறிந்தபோது, சுந்தரிக்கு எந்தக் கோணத்தில் இக்குழந்தையை அணுகுவது என்றே யோசனையாக இருந்தது. இடையில் பள்ளியின் மாதாந்திரத் தேர்வில் நூற்றுக்கு 45 மார்க் என்ற விகிதத்தில், அஞ்சுகம் தோற்றுப் போன சோகத்தோடு
வந்தாள் ஒரு நாள்.

இன்று குழந்தையிடம் பேசியே ஆவது என்ற கங்கணத்தோடு, சுந்தரி பேசத் தொடங்கினாள்.

"சொல்வதெழுதல் கொடுத்தால் தப்புத் தப்பாய்ச் செய்கிறாய். கையெழுத்திலும் அக்கறை இல்லை. வீட்டுப் பாடம் கொடுத்தாலும் ஒழுங்காகச் செய்து வருவதில்லை. பிறகு நீ ஏன் தோற்றுப் போக மாட்டாய்? ஆங்கிலத்திலும் கணிதத்திலும் காட்டும் அக்கறையில் துளி கூட தமிழில் காட்ட மாட்டேன்கிறாய்? வீணாக என் நேரத்தையும் பாழடித்து, ஏன் எனக்குச் சிரமம் கொடுக்கிறாய்?"

எப்பொழுதும் போல் மெளனமாயிருந்து கழுத்தறுக்காமல், பட்டென்று பதில் கூறினாள் அஞ்சுகம்.

"எனக்குத் தமிழ் படிக்கப் புடிக்கலை டீச்சர்,"

ஒரு வினாடி அதிர்ந்து போனாள் சுந்தரி. அந்தச் சின்ன முகத்தில் பிரதிபலித்த, வெறுப்பைக் காட்டிலும், வேதனை சுந்தரியைத் தொட்டது. நயமாகவே கேட்டாள்.

"ஏம்மா? உன் அம்மா எவ்வளவு கவலைப்படுகிறாள். தாய்மொழி தெரியாமல், வேறு எந்த மொழியில் நீ கெட்டிக்காரியாக இருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக எங்கேனும் நீ சிரமப்படுவாய்.. தவிரவும் சிங்கப்பூரில் இரண்டாம் மொழியில், நல்ல மதிப்பெண் வாங்காவிட்டால், எந்தத் தேர்விலும் நீ முழுமையான தேர்ச்சி பெற முடியாதே?"

"எனக்குப் புடிக்கலை டீச்சர், தமிழ் படிக்கவே புடிக்கலை டீச்சர், என் கிளாஸ் டீச்சரை எனக்குப் புடிக்கலை.. தமிழ் கிளாஸ்ல படிக்கிற ஃபிரண்ட்ஸ் யாரையுமே எனக்குப் புடிக்கலை டீச்சர்"

உதடு விம்ம, கண் கலங்க, அஞ்சுகம் கூறிவிட்டு அழத் தொடங்கியதும், பாய்ந்து சென்று குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள் சுந்தரி. இவள் மனம் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும், என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.. மேற்கொண்டு என்ன செய்வது என்பதுதான் கவலையாக இருந்தது.

அன்று மாலை குழந்தையை அழைக்க வந்த மணிமேகலையை முதன் முதலாகக் கவனிப்பது போல் கூர்ந்து கவனித்தாள் சுந்தரி. தாயும் மகளும் சுந்தரியின் வீட்டிலிருந்து புறப்படும் வரை, ஒரு வார்த்தை கூட, தமிழில் பேசிக்கொள்ளவே இல்லை. அதற்கடுத்த வாரம், மணிமேகலையின் வீட்டில் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்காக, கலந்து கொள்ளச் சென்ற போது, அவ்வீட்டின் சூழ்நிலை, அதிலும் குறிப்பாக அஞ்சுகத்தின் அறை, என எல்லாமே சுந்தரியை வியப்பில் ஆழ்த்தியது.

குழந்தையின் அறை முழுக்க ஆங்கிலப் புத்தகங்கள், ஆங்கிலப் போஸ்டர்... என ஆங்கில மொழி வளத்துக்காக, எல்லாமே இருந்தது. போறாததுக்கு, கணினி வகுப்புக்குக் கூட அஞ்சுகம் போகிறாள், என்பதற்கு அடையாளமாக, விலை உயர்ந்த கணினியும் அஞ்சுகத்தின் அறையில் இருந்தது. வரவேற்பறையில் பியானோவைக் காட்டி, அஞ்சுகம் அருமையாக
பியானோ வாசிப்பாள், என்று மணிமேகலை கூறியபோது, உடனே மணிமேகலையின் கணவர் சாரங்கன் பெருமிதமாகக் கூறுகிறார்.

"பியானோ மாத்திரமல்ல. நடனம் கூட அஞ்சுகம் கற்றுக் கொள்கிறாள், தெரியுமா?"

சுந்தரிக்குச் அஞ்சுகத்தைப் பற்றிய சிக்கலின் நூலிழையைப் பிடித்துவிட்டதாகவே தோன்றியது. அன்று தம்பதிகளின் திருமண ஆண்டுவிழா, என்பதால் பட்டுப் பாவாடையும், ஜரிகை சட்டையும் போட்டுக்கொண்டு, கழுத்தில் காசு மாலை, இடுப்பில் ஒட்டியாணம், காதில் ஜிமிக்கியுமாய், தங்க புஷ்பம் போல் அஞ்சுகத்தை அலங்கரித்திருந்தார்கள்.

"டீச்சர்" என்றவாறே, குழந்தை அய்ஸ்க்ரீமை, சுந்தரிக்கு நீட்டியபோது, அப்படியே கட்டிக்கொள்ள வேண்டும் போல், அத்தனை அழகாக இருந்தாள் கண்மணி..

பெற்றோர் வெட்டிய கேக்கை அத்தனை பேருக்கும் விநியோகித்த அந்தச் சமத்து கூட கண் கொள்ளா காட்சியாகவே இருந்தது. ஆனால் சுந்தரியைக் கவர்ந்த மிகப் பெரும் வேடிக்கை, அந்தக் கும்பலில் யாருமே, தங்களுக்குள் தமிழ் பேசிக்கொள்ளவே இல்லை.
ஆங்கிலம்தான் அங்கு மிகச் சரளமாக ஊடாடியது. அஞ்சுகத்தின் வயதை ஒத்த குழந்தைகளூடே, மகிழ்ச்சியே சாட்சியாய் அஞ்சுகமும் ஆங்கிலத்தை உச்சரித்த அழகு சொக்க வைத்தது.

பிறந்ததிலிருந்தே கேட்ட ஞானமும் பயிற்சியுமே இத்தனை ஆற்றலுக்கும் காரணம் என்பது தெளிவாகப் புரிந்தது.

தமிழில், லகர, ழகரம், கூட வாயில் வராமல் தடுமாறும் குழந்தை... ஆங்கிலத்தில் இப்படிப் பிளந்து கட்டுகிறாள், தவறு எங்கே என்று யூகிப்பதொன்றும் கம்ப சித்திரமல்ல.

மறுவாரம் சுந்தரி எழுதி அரங்கேற்றிய, "சித்திரக் கண்ணம்மா" என்ற குழந்தைகள் நிகழ்ச்சிக்குப் பிடிவாதமாய்ச் அஞ்சுகத்தையும் அழைத்துக்கொண்டு போனாள் சுந்தரி. அஞ்சுகத்தின் வயதுள்ள குழந்தைகளும், அதைவிட வயது குறைந்த குழந்தைகளும், மழலை மிழற்றலோடு, பாரதிக் கவிதையை, அபிநயத்தோடு, உச்சரித்ததை, ஆர்வமாய், வேடிக்கை பார்த்தாள் அஞ்சுகம். தன்னை மறந்து அவர்களுக்கு ஜரிகை எடுத்துக் கொடுக்கவும் உடை அணியவும் கூட உதவினாள்.

மொத்தத்தில் நிகழ்ச்சியை, அணு அணுவாய் ரசித்த அஞ்சுகம், ஏக்கத்துடனேயேதான் வீடு திரும்பினாள் என்பது மறு நாளே தெரிந்தது.

"டீச்சர், நான், நானும் உங்க புரோகிராமில் பங்கெடுக்கலாமா??" என்று தயங்கித் தயங்கி, மறுநாள் அஞ்சுகம் கேட்டபோது, முறுவல் மாறாமலே கேட்டாள் சுந்தரி.

"உனக்குத்தான் தமிழே பிடிக்காதே? என்னுடையது தமிழ் நிகழ்ச்சியாயிற்றே? தமிழ் சரியாகக் கூடப் பேசத் தெரியாத உனக்கு எப்படி வாய்ப்புக் கொடுக்க முடியும்?"

"அதுக்கு நான் என்ன செய்யணும் டீச்சர்?"

"அப்படி வா வழிக்கு! இன்றையிலிருந்து ஞான் கொடுக்கும் பாடங்களை ஒழுங்காகச் செய்யவேண்டும். அடம் பிடிக்கக் கூடாது.!
என்ன சரியா?!"

அஞ்சுகம் அப்படியே தன் வாக்குறுதியைக் காப்பாற்றியது, அளப்பரிய மகிழ்ச்சியைத் தான் கொடுத்தது.

ஆங்கில ஸ்டைலில் தமிழை உச்சரித்தாலும், இரண்டே மாதத்தில், 65 மதிப்பெண் வாங்குமளவுக்கு, அஞ்சுகம் முன்னேறியதில், மணிமேகலையும் சாரங்கனும், வீடு தேடி வந்து நன்றி கூறிய போது, அருமைத் தோழியிடம் இன்று பேசியே ஆவது எனும் உறுதி பிறந்தது.

ஆனால், "வீட்டில் தமிழ் பேசுங்கள், தமிழ்ப் புத்தகங்களை குழந்தைக்கு வாங்கிப் போடுங்கள். தமிழ் நிகழ்ச்சிகளுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்." என்று ஒரு தமிழ்ப் பெற்றோரைப் பார்த்து, உபதேசிக்கும் நிலைமை தனக்கு நேர்ந்ததற்காக உண்மையிலேயே, வெட்கிப் போனாள் சுந்தரி.

"குறைந்த பட்சம் உங்களுக்குள்ளாவது, தமிழில் பேசுங்களேன்,!" என்று சுந்தரி வேண்டியபொழுது, தம்பதிகள் குனிந்த தலை நிமிரவில்லை. அகம் அடிபட்டுப் போனது நன்றாகவே தெரிந்தது.

தங்களுக்குள்ளேயே ஆங்கிலம் தான் சரளமாக இருப்பதால், குழந்தையிடம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள தமிழில் முடியுமா?! என்று மணிமேகலை மெல்லக் கேட்டபோது, மீண்டும் வெட்கியவள் சுந்தரியே.

இவர்களுக்கே ஒழுங்காகத் தமிழ் பேசத் தெரியாது, என்னும் உண்மை, அப்பொழுதுதான் பொட்டில் அறைந்தது. வியந்துபோய்த் தோழியைப் பார்த்தாள்.

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு, கழுத்தில் கெட்டித் தாலி. மூக்கில் கூட ஃபேஷன் மூக்குத்தி, காலில் கூட அது என்ன சொல்வார்கள்??! ஓ! ஓ! மெட்டி, மெட்டி தானே? ஏன்? தோற்றத்தில் கூட இளங்கறுப்பாய் இந்தியத் தோற்றமே! மணிமேகலை, சாரங்கன், என்ற பெயர்கள் கூட அழகான, அருமையான தமிழ்ப் பெயர்கள் தானே?

ஹூம், ஆனால் மொழியைப் பகிர்ந்துகொள்ள மட்டும் ஆங்கிலம் தான் வேண்டும், எனும் இந்த அசட்டுத் தனத்தை மட்டும், சுந்தரியால் ஜீரணிக்கவே முடியவில்லை. மறுநாளே, முதல் வேளையாய், அஞ்சுகத்தின் தமிழாசிரியையைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது, ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது.

"டீச்சர், என்னைத் தெரியவில்லையா? நான் தான் மரகதம்!" எனக் காதில் தேனாய்ப் பாய்ந்த குரல் தானா, அஞ்சுகத்தின் ஆசிரியை.

"மரகதம் நீயா?! இந்த மரகதத்தையா அஞ்சுகத்துக்குப் பிடிக்கவில்லை? சுந்தரியின் பிரியத்துக்கு உகந்த முன்னாள் மாணவியாயிற்றே மரகதம்?"

"கலித்தொகையும், குறுந்தொகையும், பரிபாடலும், கற்றுக் கொடுங்களேன், டீச்சர்!" என ஸ்பெஷல் டியூஷனுக்கு [சிறப்பு வகுப்புக்கு] ஆசையாய் வந்து போனவளாயிற்றே மரகதம். அரைமணி நேரம் மரகதத்தோடு பேசிய பிறகு.. அஞ்சுகத்தைப் பற்றிய, இரண்டாவது முடிச்சும் அவிழ்ந்தது.

தமிழ் வகுப்பிலும் அஞ்சுகம் ஆங்கிலமே பேசுவதால், மரகதம் கண்டிக்க, தோழிகள் சிரிக்க, எனப் பல, காரணங்களால் தான், அஞ்சுகத்துக்கு, தமிழ் வகுப்பு, தமிழ் டீச்சர், தமிழ்த் தோழியர் என யாரையுமே புடிக்கலை. இப்பொழுது புரிகிறதா??

மரகதம் சுந்தரியின் வேண்டுகோளை, சிறந்த ஆலோசனையாக, செவி மடுத்ததோடன்றி, "இது என் கடமை, டீச்சர்" நிச்சயம் நான் உதவுவேன்" என்றபோதே, பாதிக் கிணறைத் தாண்டிய நிம்மதி பிறந்தது.

சில தினங்களுக்குப் பிறகு, பள்ளியில் கதை சொல்லும் போட்டிக்குத் தன்னை தெறிவு செய்துள்ளதாக மகிழ்ச்சியும் வெட்கமுமாகத் தகவல் கொண்டு வந்தாள் அஞ்சுகம்.

உடனே நூல் நிலையங்களிலிருந்து சில சிறுவர் கதைப் புத்தகங்களைs சுந்தரி, தேர்வு செய்து கொடுத்தாள். கதை சொல்லும் பயிற்சியை, ஏற்ற இறக்கத்தோடு, சுந்தரி கற்றுக் கொடுக்க, சிக்கென அதை அப்படியே பிடித்துக்கொண்ட குழந்தை, போட்டியில் முதல் பரிசு வாங்காவிடினும் , இரண்டாம் பரிசு வாங்கினாள்.

இதற்குப் பிறகு, தொலைக்காட்சியில், தமிழ்ச் செய்தி காணும் ஆர்வம் தெரிந்தது.. "காண்போம், கற்போம்" நிகழ்ச்சியை ரசித்துப் பார்ப்பது மட்டுமன்றி, அஞ்சுகம் அதுபற்றி, நிறைய கேள்விகளும் கேட்டாள். சுந்தரியின் வீட்டிற்கு வரும் தமிழ்ப் பத்திரிகைகளையும் கூட, எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினாள். இந்த ஆர்வத்தில் சில நாட்களுக்குப் பிறகு, சொந்த வீட்டிற்கும், தமிழ்ப் பத்திரிகை வரும்படி பெற்றோரிடம் ஏற்பாடு செய்து விட்டாள்.

எல்லாவற்றிற்கும் மேலாய் மனthதைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்த சம்பவம் ஒன்று நடந்தது. ஒரு நாள் மணிமேகலை, தொலைபேசியில் சொல்கிறாள்.

‘சுந்தரி, இப்பொழுதெல்லாம், அஞ்சுகம் சதா வீட்டில் தமிழ் தான் பேசுகிறாள். அதில் பல சொற்கள் புரியவே மாட்டேன்கிறது,
நேற்று, அப்படித்தான், பேருந்துக்கு நேரமாகிவிட்டது என்றபோது, ஒரு வினாடி எனக்கு ஒன்றுமே புரியவில்லை, தெரியுமா?"

"பேரூந்து?!"

சுந்தரிக்கு ஏனோ பெருமிதத்தில் மனசு நிரம்பி வழிந்தது. அதே சமயம் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போலும் இருந்தது.

மணிமேகலையயும் சாரங்கனையும், இனி அஞ்சுகம் வழிக்குக் கொண்டு வந்து விடுவாள்.

பொறுப்புத் தீர்ந்த நிம்மதியில், தன்னுடைய அடுத்த படைப்புக்காக, எழுத அமர்ந்த சுந்தரி, இறுதியாக ஒருமுறை தொலைபேசியில் அஞ்சுகத்தை அழைத்தாள்.

"என்ன அஞ்சுகம்? பள்ளியில் தமிழ் வகுப்பு எப்படி இருக்கிறது?"

"தமிழ், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கிறது, ஆசிரியை"

Saturday, January 9, 2010

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்சார் வருமா?

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் எண்ணத்தையும் மழுங்கடிக்கச் செய்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய சென்சார் அமைப்பு வந்தால்தான் இந்தியாவின் பண்பாடு காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினீத் (13). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு காட்சியைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சியில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பிடிக்கச் செய்வது போன்று செய்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவர், தானும் அதுபோலச் செய்து பார்த்துள்ளார். விளைவு தீக் காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.

இந்தச் செய்தியை நாளிதழ்களில் படித்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல் இருக்காது.
இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சினைத் தொடந்து விதைக்கும் பணியினை சில ஊடகங்கள் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயலாற்றி வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்ச்சிகளை சேனல்கள் பல தங்களின் வருமானத்துக்காகவும், நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருவதற்காகவும் சாகசம் என்ற பெயரில் போட்டி போட்டு நடத்தி வருகின்றன.

நிகழ்ச்சிக்கு நடுநடுவே, இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்காதீர்கள்.
இது மிகவும் அபாயமானது என்ற அன்புக் கட்டளை வேறு. சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கடமைக்காக போடுவதைப்போல தொலைக்காட்சி சேனல்களும் இந்த வாசகத்தை ஒளிபரப்புகின்றன.

தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் வயது முதிர்ந்த, வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவித்து உணர்ந்த பெண்களே அந்த சீரியலின் கதாபாத்திரமாக தானும் மாறி அந்தப் பாத்திரம் கண்ணீர்விட்டால் தானும் கண்ணீர் விட்டு, அது சிரித்தால் தானும் சிரித்து, அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து ஒன்றிப் போகும் நிலையில், பாவம் சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? தொலைக்காட்சிகளின் கீழ்ப்பகுதியில் எப்பொழுதாவது தோன்றி மறையும் எச்சரிக்கைச் செய்திகளைப் பார்த்து இவர்கள் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்..?

சிறு குழந்தைகள் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்திலேயே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்களை, விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள் அல்லது அறியத் துடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோமே, அதனால் ஏதேனும் விபரீத விளைவுகள் நடந்து விடாதா என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றவில்லை என்பதுதான் வேதனை.

தொலைக்காட்சித் தொடர்களில் சிலவற்றைப் பார்த்தால், அதில் நடிக்கும் சிறுவர்களைத் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சைப் பேசச் செய்து இயக்குநர் ம கிழ்ந்திருப்பார். ஆனால், அதேபோன்று அந்தத் தொடரினைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் பேசுமே; அது பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்காதே என்று அந்தத் தொடரின் இயக்குநர் கவலைப்படுவதே இல்லை.

இன்னும் சில தொலைக்காட்சிகள் கையடக்க கேமராவை மறைத்து வைத்து வழியில் செல்வோரை எல்லாம் வழிமறித்து, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களின் கடமை(?) ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, அவர்கள் (மாட்டுபவர்கள்) படும் அவஸ்தைகளைத் தாங்களும் ரசித்து, பின்னர் உலகிற்கெல்லாம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு கடைசியாக ஒரே வரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. யாரையும் புண்படுத்த அல்ல. என்று நமட்டுச் சிரிப்புடன் எளிதாகக் கூறிவிட்டு மறைகிறார்கள்.

ஆனால், அவ்வளவுநேரம் அந்தச் சம்பவம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பதையும், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அந்த சேனல்களுக்குக் கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை எப்படி ரேட்டிங்கை ஏற்றுவது என்பதுதான்.

எனவே, மக்களின் மனங்களைத் தன்வசப்படுத்தி தான் கூறும் கருத்துகளைத் திணித்து வரும் வேலையைத் திறம்படச் செய்து வரும் சேனல்களின் நிகழ்ச்சிகள் மக்களைக் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிள்ளைகள் மேல் பற்றுக்கொண்டுள்ள அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.