Wednesday, October 7, 2009

தப்பான தாளங்கள் - சிறுகதை

பச்சை பசேல் நிலச் சதுக்கம், மத்தியில் சிறந்த கட்டடக் கலை நுணுக்கங்களைப் பின்பற்றி கட்டிய கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் தன் அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதவன். அவன் அப்பா, அமெரிக்காவிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார்.

"ஆதவா என் நண்பன் சேஷூவின் மகன் பாரதி பணி நிமித்தமாக சென்னை வருகிறான். நட்பு ரீதியாக அவனைச் சந்தித்து, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்" என்று எழுதியிருந்தார்.

அவர் சொன்ன தேதியில், ஆதவனும் பாரதியைப் பார்க்க 'கொரொல்லோவில்' ஏறிப் புறப்பட்டான். தனக்குப் பிரியமான இசையைக் கேட்டுக்கொண்டே பயணித்ததில் தூரமே தெரியவில்லை அவனுக்கு. அந்த வீட்டு வாசலில் அழைப்பு மணி பொத்தானை அழுத்தினான். கதவு லேசாக திறந்தது. ஓர் இளம் பெண் எட்டிப் பார்த்தாள், அவளது பாதி முகமும், சுருண்ட கூந்தலும் தான் தெரிந்தது. கண்களாலே கபடி விளையாடினாள். என்ன? என்பது போல் பார்வையாலேயே கேட்டாள்.. ஆதவனுக்கு ஒன்றும் புரியவில்லை... வியர்த்துப் போனான்.. அலுவலகத்தில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் அதட்டுபவனுக்கு வார்த்தை வெளியே வராமல் தவித்தான். அவள் அழகில் மூர்ச்சையுற்றான். சுதாரித்துக்கொண்டு "பா.......ர.....தி" என்று இழுத்தான்.

மறுபடியும் அவள் கண்களாலேயே மேலே என்று புருவத்தை உயர்த்திப் பதில் கூறிவிட்டு, கதவை அறைந்து சாத்தினாள். மேலே சென்று பாரதியுடன் அமர்ந்திருந்தாலும் அவன் மனம் மட்டும் கீழேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. யார் அந்தப் பெண், கதவோரத்தில் வெண்ணிலாவாய். எப்படி அவளைக் காண்பது, அவளிடம் பேசுவது... இருப்புக் கொள்ளாமல் தவித்தான் ஆதவன்...

அன்று முதல் காலை நடைப் பயணம், மாலை நடைப் பயணம், மதிய உணவு என எல்லாம் அந்தக் குடியிருப்பைச் சுற்றியே அமைத்துக்கொண்டான். எந்த வேளையில் அவள் வெளியில் வருவாளோ...! எப்படியாவது அவளிடம் ஒரு முறையாவது பேசிவிட வேண்டும் என்று துடித்தான். அவளது பாதி தெரிந்த முகமே இவ்வளவு அழகென்றால்.. என்று நினைக்கும்போதெல்லாம், உடம்பில் ஜிவ்வென்று மின்சாரம் பாய்ந்தது. அவனது நெடுநாள் தவத்திற்கு அன்று பலன் கிடைத்தது. பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி புவனேஷ்வரி அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள். மிதிவண்டி எடுத்துக்கொண்டு தெருவில் ஓட்டலானாள். மெல்ல அவளருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பின்பு அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தான்.

புவனேஷ்வரி சிரித்துக்கொண்டே அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். உள்ளே செல்லும் போதே 'மம்மி யாரோ ஒரு அங்கிள் வந்திருக்காங்க' என்று அழைத்தாள். ஆதவனும் சரி அந்தப் பெண்ணின் அம்மாவிடமே விஷயத்தைச் சொல்லிச் சம்மதம் பெறுவோம் என்று தயாரானான். ஓர் அறையிலிருந்து கதவை மெல்லத் திறந்துக்கொண்டு அதே போல் அவள் பாதிமுகம் தெரிய எட்டிப் பார்த்தாள். அந்த பட்டாம்பூச்சிக் கண்களைக் கண்ட ஆதவன், தன்னை மறந்து விண்ணில் பறந்தான். அவள் மெல்ல அருகில் வர ஆரம்பித்தாள். உட்காரும் படி கண்களாலேயே சைகை காட்டினாள்.

நாற்காலியில் அமரும் வேளையில் எதிரே சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். புகைப்படத்தில் அந்தப் பெண், அந்தச் புவனேஷ்வரி, ஓர் ஆண் என்று குடும்பமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு, அந்த வெண்ணிலாவுக்கு உரிய சூரியன் அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆண் என்று.

"ஐயோ அவள் திருமணமானவளா? அந்தச் புவனேஷ்வரி அவள் மகளா? சே! எப்படி எப்படி தவறு செய்தேன்? பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்பவரைப் பைத்தியக்காரர்கள் என்று ஏளனம் செய்யும் நானா இந்த மாதிரி விழுந்துவிட்டேன்? அழகானவள் என்றாலே அவள் திருமணம் ஆகாதவளாய்த்தான் இருக்க வேண்டுமா? என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

இப்பொழுது அவளிடம் என்ன சொல்வது, என்று விழித்தான். அவள் அருகில் வந்து "யார் நீங்க? என்ன வேணும்?" என்று வினவினாள்

ஆதவன் சுதாரித்துக்கொண்டு "மேல் வீட்டுப் பாரதியின் நண்பன் நான். அவன் வீட்டில் இல்லை போல. அவன் வந்தால் ஆதவன் வந்து சென்றான் என்று சொல்லி விடுங்கள்" என்று கூறினான். அவளும் சிரித்துக்கொண்டே சரி என்று சொன்னாள். அவன் மனமொடிந்து எழுந்து சென்றான்.

புவனேஷ்வரி ஓடிவந்து அந்த பெண்ணைப் பார்த்து, "அக்கா யாரந்த அங்கிள்?, நம்ம அண்ணாவோட ஃப்ரெண்டா? என்று அந்தப் படத்தில் உள்ள தங்கள் அண்ணனைக் காட்டி கேட்டாள்.

Friday, October 2, 2009

பிளாஸ்டிக் வரமா? சாபமா?? ஓர் அலசல்....

பெட்ரோலியக் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் பல உப பொருள்களில் ஒன்றுதான் பிளாஸ்டிக் என்பதுகூட நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த பிளாஸ்டிக் கண்டுபிடித்தபோது, மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் என்றும், பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால் இயற்கை நமக்கு அளிக்கும் தாதுப் பொருள்களான இரும்பு, செம்பு, தகரம், அலுமினியம் போன்றவை மேலும் பல காலத்துக்குக் கிடைக்கும் என்றும் மனித இனமே பெருமைப்பட்டது. சணலுக்கும் காகிதப் பைகளுக்கும் வேலை இல்லாமல் போவதால், காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மகிழ்ந்தவர்களும் ஏராளம்.

இந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நூற்றாண்டு காலத்தில் மறைந்து, பிளாஸ்டிக் மனித இனத்துக்கு மட்டுமன்றி, உலகில் வாழும் உயிரினங்களுக்கும் ஏன் உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இறைவனின் படைப்பில் உலகிலுள்ள அத்தனை பொருள்களுமே மண்ணில் மக்கிவிடும் தன்மையன. அதனால் கழிவுகள் மலைபோலக் குவிந்துவிடாமல் உலகம் காப்பாற்றப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை இல்லாதவையாய் இருப்பதுடன், நிலத்தடி நீர் முறையாகச் சேகரிக்கப்பட முடியாமல் தடுக்கவும் செய்கின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்குக் குறைந்தது 1000 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் எரிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் வாயு புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது எனகிறார்கள்.

பிளாஸ்டிக்கால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான். நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பிளாஸ்டிக்கினால், உலகம் முழுவதுமே பாலைவனமாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகளே எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதுடன் பலரும் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தில்லி, சண்டிகர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உதகமண்டலத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முழுமூச்சாக பிளாஸ்டிக் தவிர்ப்பு மக்கள் இயக்கமாக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றமேகூட 60 மைக்ரானுக்கும் கீழேயுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருக்கிறது.

பிளாஸ்டிக்கை முழுமையாகத் தவிர்த்து விடுவதோ தடை செய்வதோ சாத்தியமானதல்ல. மனித இனத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே இன்னும் பல பொருள்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், கழிவுநீர் ஓடைகளை அடைக்காமல், கண்ட இடங்களில் வீசி எறியப்பட்டு நிலத்தடி நீருக்குத் தடையாக இருக்காமல், கடலில் கலந்துவிடாமல் பாதுகாக்க முடியும். மக்கள் மனது வைத்தால், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிமைப்படுத்தி நகராட்சி அமைப்புகளுக்கு உதவ முடியும்.

சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40 தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் நீலகிரி மாவட்டம்தான் தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. சுப்ரியா சாஹு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது பிளாஸ்டிக்கின் கோரப் பிடியிலிருந்து சுற்றுலாத் தலமான ஊட்டியை முற்றிலுமாக விடுவித்து, தமிழகத்துக்கே அவர் வழிகாட்டினார் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் நூறாயிரம் கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் டன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அடுத்த சில நிமிடங்களிலோ, மணித்துளிகளிலோ குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்பது தெளிவு.

சென்னையை எடுத்துக்கொண்டால், மாநகரத்தின் மொத்த கழிவுப் பொருள்களில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் பைகள். சட்டப்படி, 20 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதேகூட குற்றம். ஆனால், இந்தச் சட்டத்தை யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. நடைமுறைப்படுத்துவதாகவும் தெரியவில்லை.

ஒரு பலசரக்குக் கடையிலோ, காய்கறிக் கடையிலோ, வெற்றிலை பாக்குக் கடையிலோ இதுபோன்ற 20 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தரப்பட்டால், பொதுமக்கள் யாரிடம் போய் புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா? அந்தப் புகாரை காவல்துறை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. அரசாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா, மக்களுக்குத் தெளிவான வழிமுறைகளை முன்வைக்கிறதா என்றால் கிடையாது. இந்த விழிப்புணர்வை அரசுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் சமுதாயக் கடமை இருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் முயன்றால்...?

Thursday, October 1, 2009

முல்லைப்பெரியாறு - கருணா‌நி‌தி தட்டிக்கேட்காதது ஏன்!

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தட்டிக்கேட்காதது ஏன் என்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு அதை தட்டிக்கேட்காததன் மூலம் கருணாநிதி தமிழகத்துக்கு துரோகம் செய்கிறார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்த கருணாநிதி, “முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு அறியும். எனவே, கேரள அரசுக்கு இதைப்போன்ற அனுமதியை கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ராசா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதாக ராசாவிடம் மத்திய அமைச்சர் உத்தரவாதம் அளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.

இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத்திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழ்நாட்டிற்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர்காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக்காலத்தில் உள்ள நிலைமை! கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்த நிலை மாறி, கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சாதகமாக இருந்த சூழ்நிலை, 2009 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சாதகமாக மாறிவிட்டது! இதுதான் கருணாநிதியினுடைய நிர்வாகத் திறமை!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஏற்கனவே இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், அதற்கு முற்றிலும் நேர்மாறான செயலை செய்ய மத்திய அரசு எப்படி முன் வந்தது? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு முறையிட்டதா? மத்திய அரசின் அனுமதிக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டாமா?

மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்றபோது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா? தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா? மத்திய அமைச்சரான தன் மகன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமை குறித்தே அக்கறை செலுத்தாதவர் கருணாநிதி! தனக்கு வர வேண்டியது வந்தால் போதும் என்று நினைக்கிறார் போலும்!

நான் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி! அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமலேயே தமிழகத்திற்கு துரோகம் செய்தார். இன்று கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. அப்படி இருந்தும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது. முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்! கருணாநிதியால் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது'' எ‌ன்று ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.