Tuesday, July 14, 2009

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் - இந்தியப் படை அணிவகுப்பு

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான பாஸ்டில்லா தின கொண்டாட்டங்கள் பாரிசில் இன்று நடைபெற்றன. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றதுடன், இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது. இநதியப் பிரதமர் ஒருவர் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில்லி தின கொண்டாட்டங்களில் பங்கேற்பது இதுவே முதல்முறை.

இந்த நாளையொட்டி இந்திய வீரர்கள் சுமார் 400 பேர், பேண்ட் வாத்தியங்களுடன் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியுடன் இணைந்து, பிரதமர் மன்மோகன் சிங் கண்டு களித்தார். மன்மோகன் சிங் தவிர கம்போடிய பிரதமர் ஹூன் சென், ஜெர்மன் அதிபர் ஹார்ஸ்ட் கோஹ்லர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பிரான்ஸ் அதிபர் தனது மனைவியும், பாப் பாடகியுமான கார்லா ப்ரூனியுடன் கலந்து கொண்டார்.

இந்தியா - பிரான்ஸ் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மன்மோகன் சிங்கிற்கு சர்கோஸி இந்த அழைப்பை விடுத்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கமான அணிவகுப்பில் அணியும் கறுப்பு, சிவப்பு உடைகளில், வெள்ளை நிற பார்டர்களுடனும் (புட்டீஸ்), கையுறைகளுடனும் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் (ஒரு மைல்) தொலைவிற்கு இந்த அணுவகுப்பு விமரிசையாக நடைபெற்றது.

பிரதமரின் பிரான்ஸ் பயணத்தையும், அங்கு பிரதமர் முன்னிலையில் இந்திய வீரர்களின் அணிவகுப்பையும் இந்திய செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இந்திய வீரர்களின் அணிவகுப்புக்கு இடையே பிரான்ஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள், அந்நாட்டின் தேசியக் கொடியின் வண்ணங்களைக் குறிக்கும் வகையில் சிகப்பு, வெள்ளை மற்றும் நீல நிற புகைகளை கக்கிச் சென்றன.

இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் வழங்கும் நாடுகளில் பிரான்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரான்ஸ் நிறுவனமான அரீவா, இந்தியாவிற்கு 6 அணு உலைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாடு குடியரசாக உருவானதை குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 14ஆம் தேதியன்று பாஸ்டில்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment