Monday, August 31, 2009

விஜய் காங்கிரசில்??? => பலமுனை எதிர்ப்பு!!

நடிகர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலை டில்லியில் சந்தித்து விட்டு திரும்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், விஜயை வரவேற்றுள்ளதால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லது ராஜ்யசபா எம்.பி., பதவி அவருக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.விஜய் மீண்டும் ராகுலின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி உள்ளது. அடுத்த மாதம் தமிழகம் வரும் ராகுலை சந்திக்கும் போது தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என, காங்கிரஸ் கட்சியில் முன்னணியில் இருந்து வரும் தலைவர்களின் வாரிசுகள் கணக்கு போட்டு காத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரும் பட்சத்தில், அவரது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்படும்.

இதனால், பதவியை எதிர் பார்த்துக் காத்திருக்கும் காங்கிரசார் இப்போதே தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள் சிலரை, விஜயின் அப்பா சந்திரசேகர் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வாசன் மூலமாகவே ராகுலை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்வது உறுதியாகி உள்ளது. விஜய் முடிவுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் மனைவியின் பூர்வீகம் இலங்கை. லண்டன் மற்றும் கனடாவில் அவரின் பெற்றோர்களும், உறவினர்களும் உள்ளனர். இதனால் கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விஜய் ரசிகர்களாக உள்ளனர். இதனால், விஜய் நடித்த படங்கள் வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விஜய், காங்கிரசில் சேர்ந்தால் இந்நாடுகளில் அவரது படங்களைப் புறக்கணிப்போம் என்று கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்தக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் விஜய், மக்கள் இயக்கம் துவங்கி அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று புதிய அரசியல் கட்சி துவங்கப் போவதாக செய்திகள் வந்தன. இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாகவும், அவருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர்களும் குடிமக்கள் என்பதால், அவர்களும் அரசியலில் பங்கு கொள்ள உரிமை உண்டு. ஆனால் விஜய், காங்கிரசில் சேர முன் வந்தால், அதைத் தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள்.மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது தான் இலங்கையில் வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை அரங்கேறியது.காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் விஜய் கைகோர்க்க எத்தனித்திருப்பது, இலங் கைத் தமிழர்களுக்கு செய்யக் கூடிய ரெண் டகம். விஜய் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விஜய் படங்கள், நடித்து வெளிவர இருக்கும் புதிய படங்களை உலகளாவிய அளவில் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்' என, கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், விஜய் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Sunday, August 30, 2009

வேலையைக் காப்பாத்திக்கோங்க!!

பொருளாதாரத் தேக்கநிலை இன்னமும் சரியாகாத நிலையில் இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பேரின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 40 ஆயிரம் ஒப்பந்தப் பணிகள் தோன்றியுள்ளன. எனவே நிகர வேலையிழப்பு ஒரு லட்சத்து 32 ஆயிரமாக உள்ளது. வேலையிழப்புகளுடன் பிற துறைகளில் வருமான இழப்பும் ஏற்பட்டுவருகிறது. ஜெம் மற்றும் நகைத் தொழிலில் மட்டுமே வருமானங்கள் அதிகரித்துள்ளன. டெக்ஸ்டைல், மெட்டல், ஜெம் மற்றும் நகைத் தொழில், போக்குவரத்து, ஐ.டி., பி.பி.ஓ., ஆகிய துறைகளில் நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

மலேசியாவில் மாற்றம்:

மலேசியாவில் தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான பெர்மிட்களுக்கு மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில் வேலையிழந்த அந்த நாட்டு மக்களுக்கு இப் பணிகளைத் தர வேண்டும் என்று மலேசிய அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. மலேசியாவின் ஊழியர் தேவைகளுக்கு அது இந்தியாவையே பெரிதும் நம்பி வந்துள்ளது. கட்டுமானம், பிளான்டேஷன், ரெஸ்டாரண்ட் துறைகளில் இந்தோனேஷியா , வங்கதேசம் நேபாளம் போன்ற நாடுகள் மலேசியாவிற்கு உதவியாக இருந்து வந்துள்ளன.

அமெரிக்காவில் தற்காலிகப் பணி நியமனம்:

அமெரிக்காவில் வெரிடியூட் என்னும் மனித வள மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி அமெரிக்காவிலுள்ள 45 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் ஊழியர்கள் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்யப்படுவர் என கணித்துள்ளது. ஒன்று திரட்டப்பட்டு சேர்ந்து இயங்கவுள்ள 25 சதவீத நிறுவனங்களில் ஐ.டி., மற்றும் புரபஷனல் பணிகளை அதிகரிக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. திறன் வாய்ந்த பணியாளர்களை இப்படி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியிலமர்த்துவதன் மூலமாக பொருளாதார தேக்க நிலையை சமாளிக்க முடிவதோடு செலவுகளையும் குறைக்க முடியும் என்பதாலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

Friday, August 28, 2009

வி.வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு வாபஸ் : பட்டியலில் இருந்து 30 பேரை நீக்கியது அரசு!

வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த 30 பேருக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

தற்போது நாடு முழுவதும் உள்ள வி.ஐ.பி.,களுக்கு எக்ஸ், ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் என்ற நான்கு பிரிவுகளின் கீழ், மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிட்டு வருகிறது. வி.ஐ.பி.,களில் சிலர், தங்களது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும், தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், போலி அந்தஸ்திற்காகவும் பாதுகாப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சில வி.ஐ.பி.,கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற உள்ளதாகவும், அதற்கான பெயர் பட்டியலை உள்துறை அமைச்சகம் தயாரித்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவியேற்றதும், "வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து, சிலருக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு வாபஸ் பெறப்படும் பாதுகாப்பு படையினர், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படுவர். எனக்கும் எந்தவித சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை' என கூறியிருந்தார். இதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக சத்தமில்லாமல் நடந்து வந்தன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை நேற்று குறைத்துள்ளது. குறிப்பாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.எஸ்.சபர்வால் உட்பட 30 வி.ஐ.பி.,களுக்கு அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை குறைப்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில், எக்ஸ் பிரிவு பாதுகாப்பு பெறுவோரின் பட்டியலில் இடம் பெற்றிருந்த 30 பேருக்கு, அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவிக்கும் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.,களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்துள்ளது. எக்ஸ் பிரிவு பாதுகாப்பை பெறும் வி.ஐ.பி.,க்கு எட்டு மணி நேரத்துக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு மூன்று பேர் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவர். இதைப் பின்பற்றி, ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளிலும், பாதுகாப்பு அளிக்கும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாதிரி பாதுகாப்பு குறைக்கப்படும் தலைவர்கள் பெயர் பட்டியலில், உ.பி., அரசியல் பிரமுகர் டி.பி.யாதவ், நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான கோவிந்தா, பா.ஜ., எம்.பி., வருண், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு குறைப்பு தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து, ஏராளமான வி.ஐ.பி.,கள், குறிப்பாக அரசியல்வாதிகள், அதிகாரிகளை தொடர்பு கொண்டு, எங்களுக்கான பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டாம் என வலியுறுத்த துவங்கியுள்ளனர்' என்றார். மேலும், அதிக பாதுகாப்பு இருந்தால், அவர் செல்வாக்கான அரசியல்வாதி என்ற கருத்து பொது மக்களிடம் ஏற்படும் என்று கட்சிகள் கருதுகின்றன. மத்திய அரசில் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, ஆண்டுதோறும் வி.ஐ.பி.,களின் பாதுகாப்புக்காக செலவழித்து வந்த பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Thursday, August 27, 2009

மனைவி கை செலவுக்காக கிட்னியை விற்கும் வாலிபர்!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் சமீபத்தில் தன் கணவரிடம் இருந்து பிரிய கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழலாம். மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் செலவுக்கு 8 ஆயிரம் ரூபாயை கணவன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மனைவியிடம் இருந்து விடுதலை பெற்ற அந்த நபர் கடந்த சில மாதங்கள் மட்டுமே மாதம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தார். அதன் பிறகு அவரால் பணம் புரட்ட இயலவில்லை.

3 ஆயிரத்து 600-க்கு மாத சம்பளத்தில் வேலை பார்க்கும், அந்த நபருக்கு 8 ஆயிரம் ரூபாய் புரட்டி முன்னாள் மனைவிக்கு கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது.

வேறு வழி தெரியாத அந்த நபர் கடந்த வாரம் சண்டிகார் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், என்னிடம் இருந்து பிரிந்து சென்ற என் மனைவிக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பணம் கொடுக்கவில்லை.

அவர் கைச் செலவுக்காக பணம் கொடுக்க வேண்டுமானால் என் 2 கிட்னிகளில் ஒன்றை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டும். சட்டப்பிரிவு 125-வது விதியின் கீழ் எனக்கு இதற்கு அனுமதி தரவேண்டும் என்று கூறினார். இந்த மனு மீதான தீர்ப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

Monday, August 24, 2009

ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ - ஓர் பார்வை

குழந்தைகளின் வாழ்வை சிறுவயதிலேயே பறிக்கும் போலியோ என்ற முடக்குவாத நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் தனது கண்டுபிடிப்பை காப்புரிமை செய்ய மறுத்து விட்டார். காரணம், "சூரியனுக்கே காப்புரிமை பெறுவது போன்ற செயல் அது" என்று கூறினார்.

ஆனால் இன்று உலகம் முழுதும் மனிதர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற காய்ச்சல, கொள்ளை நோயாக பரவி வரும் வேளையில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டிய அறவியல் ரீதியான கட்டாயம் ஏற்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ என்ற வணிக முத்திரையில் விற்கப்படும் ரோச் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மருந்தின் மூலப்பொருளை உற்பத்தி செய்து அந்த மருந்தை எளிதில் குறைந்த விலைக்கு கிடைக்குமாறு செய்ய ஏன் முடியவில்லை?

ஏனெனில் இந்த மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறும் ரோச் நிறுவனம் அதன் காப்புரிமையை வைத்துள்ளது. மிகப்பெரிய கொள்ளை நோயாக ஸ்வைன் ஃப்ளூ உருவாகி வரும் வேளையிலும் உலக சுகாதார அமைப்பு இந்த காப்புரிமை என்ற லாப வேட்டைக் குறிக்கோளை தளர்த்த முயலவில்லை.

நாம் வாழும் இன்றைய உலகின் மிகப்பெரிய மோசடி என்னவெனில், உயிரைக் காப்பாற்றக்கூடிய எந்த ஒரு மருந்தையும் ஏழை நாடுகள் தாங்களாகவே தயாரித்து சுய நிறைவு எய்த முடியாது என்பதே.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள வசதிகளின் படி டாமிஃப்ளூவை இன்று குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் உற்பத்தி செய்யக்கூடாது என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. ஏனெனில் பண்ணாட்டு நிறுவங்களின் காப்புரிமையையும், லாப நோக்கையும் காப்பதுதான் அதன் பணி! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஸ்வைன் ஃப்ளூ ஒரு மக்கள் தொகை அழிப்பு எந்திரமாக உருமாறி வருவதிலிருந்து ஏழை நாடுகள் தப்பிப்பதற்கான மாற்று வழி இருந்தும் அதனை நாம் செய்து மக்களை இந்த கொடிய நோயிலிருந்து காப்பற்ற முடியாச சூழ்நிலையில் வாழ்கிறோம்.

மும்பை, புனே போன்ற பகுதிகளில் டாமிஃப்ளூ கள்ளச்சந்தையில் நாம் கற்பனை செய்ய முடியாத விலைக்கு விற்கப்படுவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகம். அரசு மருத்துவமனையிலிருந்து பேராசை பிடித்த சில சக்திகள் டாமிஃப்ளூவை எடுத்து வெளியில் விற்கும் ஒரு போக்கையே இது காண்பிக்கிறது.

இந்த நிலையில் டாமிஃப்ளூவின் உட்பொருளை அந்தந்த நாடுகளே தயாரித்து அதனை வணிக முத்திரையற்ற மூலப்பெயரில் விற்கும் உரிமையை வலியுறுத்துவது உலக நாடுகளின் கடமையாகும். ஏழை நாடுகளுக்கு ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பரவி உயிர் பலி பெரிய அளவிற்கு ஏற்படக்கூடும் என்று சில மாதங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்த உலகச் சுகாதார அமைப்பு, ஏன் அதற்கு தீர்வாக அமையும் ஒரு மருந்தினை அந்த நாடுகள் தயாரிக்க அனுமதிக்கவில்லை?

மருந்து ஆராய்ச்சி அல்லது உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான ஆய்வு பெரும்பாலும் வெளி நாடுகளில் அரசு நிதி உதவியுடன் நடைபெறும் பல்கலைக் கழங்களில் நடத்தப்படுகிறது. விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டு ஒரு உயிர் காக்கும் மருந்தை பல ஆண்டு உழைப்பில் கண்டு பிடிப்பதன இறுதித் தறுவாயில் மருந்து நிறுவனம் ஒன்று நுழையும், செலவுகளில் பாதியை கொடுக்கும், அதாவது ராசயனத்திற்கான செலவுகள், பரிசோதனை நடத்துவதற்கான செலவுகள் ஆகியவற்றை ஏற்கும். ஆனால் இறுதிக் கட்டத்திற்கு முந்தைய மிகப்பெரிய செலவுகள் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. அது மக்கள் வரிப்பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த செலவுகளை ஏற்று அந்த குறிப்பிட்ட உயிர் காக்கும் மருந்திற்கான உற்பத்தி மற்றும் விற்பனை உரிமையை தனதாக்கிக் கொண்டு காப்புறுதி என்ற பெயரில் அடுத்தவர்களை நெருங்க விடாமல் லாபங்களை கொள்ளை கொள்ளையாக குவிக்கும். கொள்ளை நோய் என்பதன் இன்னொரு அர்த்தம் இது போண்ற நிறுவனஙளின் கொள்ளை லாப நோய் என்றே கூட நாம் மறுப் பெயரிடலாம்.

தென் ஆப்பிரிக்காவில்தான் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். தன் நாட்டு நோயாளிகளுக்கு தாங்களே மருந்து உறுபத்தி செய்யும் உரிமை அந்த நாட்டிற்கு கிடையாது. எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் அந்த காப்புரிமை பெற்ற மருந்தை தென் ஆப்பிரிக்கா உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மருந்தின் காப்புரிமை பெற்றிருந்த அந்த நிறுவனம் தென் ஆப்பிரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது.

ஆண்டொன்றிற்கு நோயாளி ஒருவருக்கு 100 டாலர்களில் முடிய வேண்டிய செலவை, 10,000 டாலர்களுக்கு ஆண்டு தோறும் மருந்தை இறக்குமதி செய்யவைத்தது அந்த நிறுவனம். உயிர்க்கொல்லி நோய்களால் அவதியுறும் ஏழை மக்களை உயிர்காப்பு மருந்துகள் நெருங்க விடாமல் தடுக்கப்படுகின்றன. அப்படியே இந்த மருந்தை இந்தியா போன்ற நாடுகள் உற்பத்தி செய்தாலும் அதன் அதிகாரம் ஒரு நிறுவனத்திற்கே வழங்கப்படும், அந்த நிறுவனம் காப்புரிமை பெற்ற நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை அளிக்கவேண்டி வரும். இதனால் யாரும் இதில் இறங்குவதில்லை.

எந்த ஒரு உயிர்க்கொல்லி நோயும் கொள்ளை நோயாக உலகம் முழுதும் பரவும் போதும் அந்த குறிப்பிட்ட நாடுகள் அந்த மருந்தின் நகலை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டியது இன்றைய கட்டாயத் தேவையாகும். சந்தைப் பொருளாதாரத்தில் போட்டிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று கூறும்போது, அங்கு ஒட்டு மொத்த உரிமையை எப்படி ஒரே நிறுவனம் வைத்திருக்க அனுமதிப்பது?

தென் ஆப்பிரிக்க விஷயத்தில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்த மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி எழும் போது ஏழை நாடுகள் உயிர்காக்கும் மருந்தின் நகலை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று நாடுகளிடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த ஒப்புதலின் அடிப்படையில் இன்று இந்தியா டாமிஃப்ளூவின் 'ஜெனிரிக்' வடிவத்தை தயாரித்துக் கொள்ளலாம். அதாவது காப்புரிமை வைத்திருக்கும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒரே தவணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு தயாரித்துக் கொள்வது. ஒரு சில நிறுவனங்களுக்கு இதன் உற்பத்தி உரிமைகளை காப்புரிமை பெற்ற நிறுவனம் அளிக்க முன் வந்தாலும், அதற்கான உரிமம் பெற ஒரு பெரிய தொகையை அளிக்கவேண்டும். இதனால் அதுவும் பயனில்லாமல் போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்லது மருந்து அது தேவைப்படும் அளவிற்கு கிடைக்காமல் போக வாய்புள்ளது.

ஆனால் இந்த பொதுச் சுகாதார நெருக்கடி எது என்பதை உலக சுகாதார அமைப்பே தீர்மானிக்கும். இது போதாதா? ஸ்வைன் ஃப்ளூ பரவல் நெருக்கடி நிலைக்கு உயரவில்லை என்று கூறிக்கொண்டே காலம் கடத்தலாம்.

ஏன் காப்புரிமை வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறீர்கள் என்று அந்த நிறுவனங்களிடம் கேட்டால், 'நாங்கள் ஒன்றும் சும்மா இல்லை, ஏகப்பட்ட உயிர்காப்ப்பு மருந்துகளுக்காக நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம், அவற்றிற்கு ஆகும் செலவு பயங்கரமானது, எனவே நாங்கள் இதிலிருந்து வரும் வருவாயை மீண்டும் ஆய்விற்குத்தான் பயன்படுத்துகிறோம், நிறைய ஆய்வுகள் சந்தைக்கு கொண்டு செல்லும் மருந்துகளாக முடிவதில்லை. இது ஒரு மிகப்பெரிய நடைமுறை அதிகம் செலவாகும்' என்று கூறுவார்கள்.

ஆனால் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் மருந்துவ இதழில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் ஒருவர் இது பற்றி முழு விரிவாக ஆய்வு நடத்தியுள்ளார். மருந்து நிறுவனங்களின் பட்ஜெட்டில் 12 முதல் 14 விழுக்காடு வரையே புதிய மருந்து ஆய்விற்கு செலவிடப்படுகிறது, அதுவும் ஆய்வு நடத்துவது வேறு சிலர். அந்த ஆய்வின் இறுதிக் கட்டத்தில் சென்று ஒரு குறைந்த அளவில் செலவை ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிறுவனங்களின் ஆய்வுகளெல்லாம் ஏற்கனவே உள்ள சாதாரண மருந்துகளில் புதிதாக ஒரு ரசாயனத்தைச் சேர்த்து ஏற்கனவே மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள் பயனற்றவை என்று கூறி முழு காப்புரிமையை தன் இந்த புதிய மருந்திற்கு பெறுவதே என்ற அதிரடி உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்.

இதனால் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக அழிக்கும் எந்த ஒரு நோய்க்கான தீவிர ஆராய்ச்சியையும் சீரியசாக எந்த பன்னாட்டு நிறுவனங்களும் செய்வதில்லை. மலேரியாவிற்கு என்னவெல்லாமோ மருந்துகள் கண்டுபிடித்தும் இன்றும் அது ஒரு உயிர்க்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. மலேரியா நோய்க்கான மருந்தை விற்று வரும் நிறுவனங்கள் எவ்வளவு லாபம் பார்த்திருக்கும். ஆனால் மலேரியாவை ஒழிக்க அதில் ஒரு சில விழுக்கட்டுத் தொகையினைக்கூட செலவிடுவதில்லை என்பதுதான் இன்றைய இருண்ட உண்மை.

அமெரிக்காவில் இதனை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. கட்சிகளுக்கு மருந்து நிறுவனங்கள் பெரிய அளவிற்கு நிதி கொடுக்கின்றன. அவர்களது தேர்தல் பிரச்சார செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்காவில் கடைசியாக அமல் செய்யப்பட்ட சுகாதார மசோதா 2003ஆம் ஆண்டு. இதனை பெரிதும் வடிவமைத்தவர்கள் மருந்து உற்பத்தி நிறுவன ஆதரவாளர்களே என்று குடியரசுக் கட்சியின் உறுப்பினர் வால்டர் பர்ட்டன் என்பவர் கூறியுள்ளார்.

இது போன்ற ஒரு அழுகிபோன அமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை சிறிதும் மாறிவிடக்கூடாது என்பதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக இருந்து வருகின்றன. மனித சமூகத்தின் ஆரோக்கியமும், உடல் நலமும் பெரிதல்ல, மருந்து நிறுவனங்களின் ஆரோக்கியமும், நிதி நிலையுமே முக்கியம். எப்போது மாறப்போகிறதோ உலகளாவிய இந்த இழி நிலை?

Friday, August 14, 2009

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை தேவையா?

எம்எல்ஏக்களுக்கு சென்னையில் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பலமுனைகளில் இருந்து எதிர்ப்புகளை உருவாக்கினாலும், இந்த சட்டப்பேரவையின் காலத்துக்குள் வீட்டுமனை வழங்குவதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகத் தகவல்.

இதற்கிடையே, எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 50,000 ஊதியம் என்ற உயர்வு அறிவிப்பு வேறு.
இந்த நேரத்தில்தான் காலப் பொருத்தத்துடன் சில தலைவர்களின் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.


காமராஜர் என்றொருவர் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார்! அவர், தனது சொந்த ஊரான விருதுப்பட்டிக்கு (இப்போதைய விருதுநகர்) செல்லும்போது முன்னால் சுழல் விளக்குடன் சென்ற காவல் துறை வாகனத்தை நிறுத்தி "ஏன் சங்கு ஊதிக் கொண்டே செல்ல வேண்டும்?' எனக் கேட்டார்.

பின்னொரு முறை தனது வீட்டுக்குச் சென்ற அவர், அங்கே புதிய குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அதிகாரிகளை அழைத்து எனது வீட்டுக்குக் குடிநீர்க் குழாயை அமைக்கக் கேட்டது யார்? என வினவினார்.

"ஆயிரக்கணக்கானோர் குடிநீரின்றித் தவிக்கும்போது, முதல்வரின் வீடு என்பதால், வீட்டுக்குக் குடிநீர் இணைப்பை இத்தனை வேகத்தில் கொடுப்பீங்களான்னே?' எனக் கேட்டார்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜீவானந்தம். எதிர்க்கட்சியானாலும், அவரது தொகுதிக்குள் ஒரு விழாவில் பங்கேற்க வந்த காமராஜர் "எங்கே ஜீவானந்தம்?' எனக் கேட்டார்.

அவரது குடிசை வீட்டுக்குச் சென்று "வாங்க ஜீவா, விழாவுக்குப் போகலாம்' என்றார் காமராஜர். "இல்லையில்லை, என்னால் வர முடியாது; எனது வேஷ்டியையும், சட்டையையும் துவைத்துக் காய வைத்துள்ளேன். காய்ந்தபிறகு அதை உடுத்திக் கொண்டுதான் வர முடியும்' என்றார் ஜீவானந்தம்.

இப்படி எளிமையாகவும், யதார்த்தமாகவும் வாழ்ந்த பல எம்எல்ஏக்களை, அமைச்சர்களை, முதல்வர்களை, தலைவர்களை இந்தத் தமிழ்ப் பூவுலகம் கண்டுள்ளது.

காமராஜரைப் போல, கக்கனைப் போல, ஜீவாவைப் போல இருங்கள் என்று இப்போதுள்ள தலைவர்களை, மக்கள் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டால் நாம் புத்திபேதலித்தவர்கள். அரசியல் சூழல் வெகுவாக - தலைகீழாக மாறியிருக்கிறது.

ரூ. 50,000 ஊதியம் என்பதில்கூட, கார் பயணம், அலுவலகச் செலவுகள் எல்லாமும் சேர்த்துத்தான் என்று விளக்கமளிக்கிறார்கள். போகட்டும், மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஆனால், சிலவற்றை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ரூ. 50,000 ஊதியம் வாங்கும் எம்எல்ஏக்கள் தவறு செய்யக் கூடாது. இன்னும் வேண்டுமானால், தேவையான ஊக்க- உதவித் தொகைகளை கூடுதலாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எவரிடமும், எந்தக் காலமும்- அன்பளிப்பாகக் கூட எந்தப் பொருளையும், பணத்தையும், உதவியையும் பெற்றுக் கொள்ளாதவர்களாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும்.

அவ்வாறு பெறுபவர்களை கையும்களவுமாகப் பிடிக்கும் இன்னொரு காவல் துறைப் பிரிவையும் முதல்வர் உருவாக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், அந்தப் பிரிவுக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

நேர்மையான மக்கள் பிரதிநிதிகளாக எம்எல்ஏக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் ஊதிய உயர்வை அங்கீகரிக்கலாம். ஆனால், எல்லா வகையிலும்- எம்எல்ஏக்களுக்கு இலவச வீட்டுமனை என்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

தொகுதியின், தொகுதி மக்களின் பிரதிநிதியான எம்எல்ஏ, சென்னையில் இடம் கிடைத்துச் சென்றுவிட்டால்? மக்களை விட்டு அவர் விலகி வெகுதொலைவு சென்றுவிடுகிறாரே? அப்புறம் இன்னொன்றையும் செய்யலாம், எம்எல்ஏக்களிடம் மனுக் கொடுக்க சென்னை செல்பவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, தள்ளுபடி விலையில் ரயில் பயண அட்டைகள்...

அடுத்து, எம்எல்ஏக்கள் ஒன்றும் நிரந்தரமானவர்கள் அல்லர். ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ராஜிநாமா செய்பவர்கள் அதிகரித்து வருவதும், இடைத் தேர்தலின்போது மீண்டும் அவர்களுக்கு போட்டியிட இடம் கிடைக்காததும் தற்போதைய அரசியலில் இயல்பான ஒன்றாகி வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது அனைத்துக் கட்சிகளிலும் இப்போது மாறியிருக்கும் வரவேற்கத்தக்க அரசியல் போக்கு.

அப்படியானால், சில பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கணிசமான எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளுக்கு "அதிகாரப்பூர்வமாகவே' சென்னையிலும் சில வீடுகள், தனி மாவட்டம்(!?), போலீஸôருக்கு இருப்பதைப் போல தனி ரேஷன் விநியோக முறை, தனியாக குறைதீர் ஆணையம்...

பிறகு, தேர்தலின்போது மட்டும் உள்ளூரில், தொகுதிக்குள் முகாம்- தனி அலுவலகம், சொகுசான வீடு. இப்படியான அக- புற மாற்றங்கள் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

மக்களின் வாழ்க்கைத் தரத்தில், வாழ்வியல் சூழலில் எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படாது. இன்னமும், இன்னமும் கீழே இறங்கிச் செல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.

Tuesday, August 11, 2009

தெற்காசிய நாடுகள் நடத்திய ஆட்கடத்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களையே வெள்ளை வேன்களில் கடத்திப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் ‘ஜனநாயக அரசு’, தனது கடத்தல் ஆற்றலை முதல் முறையாக இலங்கைக்கு வெளியே நடத்தியுள்ளது என்பதைத் தவிர அதன் சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஆனால் இதற்கு மலேசிய அரசும், செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி சிறிலங்க அயலுறவு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலா பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்த மற்ற தெற்காசிய நாடுகளின் ‘ஒத்துழைப்பு’தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

ஒரு நாட்டிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளிலோ சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் ஒருவரைக் கைது செய்ய பல்வேறு ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சர்வதேச காவல் துறையின் (இண்டர்போல்) வாயிலாக எச்சரிக்கை அறிவிக்கை (Red corner notice) விடுக்கப்பட்டு அதன் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று அப்படிப்பட்ட நபரை கைது செய்யும் சட்ட நடைமுறை உள்ளது.

அவ்வாறு இண்டர்போல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள் மீதான தங்கள் முடிவை அரசுகள் மாற்றிக் கொண்டதும் நடந்துள்ளது (உதாரணத்திற்கு போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கியக் குற்றிவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி மீது இந்திய அரசின் வற்புறுத்தலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கை பிறகு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது).

இண்டர்போல் அறிவிக்கையின்படி கைது செய்யப்படும் நபரை நாடு கடத்துவதற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற (Extradition Treaty) உடன்படிக்கை செய்துகொள்ளும் வழமையும் உள்ளது.

அப்படிப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டின் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட நபரை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லக் கோரி சம்பந்தப்பட்ட நாட்டின் சார்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டதும் நடந்துள்ளது.

செல்வராசா பத்மநாதனை கடத்த உதவிய மலேசிய நாட்டில்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி பதுங்கியிருந்தபோது, அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மலேசிய நீதிமன்றத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) மனு செய்து வாதிட்டது. ஆனால், அவருக்கு எதிராக குற்றச்சாற்றிற்கு பலமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மறுத்தது மலேசிய நீதிமன்றம். மேல் முறையீட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிட்டவில்லை.

மற்றொரு உதாரணம்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக வழக்குத் தொடரப்பட்ட அபு சலீம். அபு சலீமிற்கு எதிராக சர்வதேச காவல் துறையின் மூலம் எச்சரிக்கை அறிவிக்கை செய்தது மத்திய புலனாய்வுக் கழகம். தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்தபோது சர்வதேசக் காவல் துறையால் அபு சலீமும், மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் உடனடியாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை போர்ச்சுகல் அரசு. சர்வதேசக் காவல் துறையும் அப்படிப்பட்ட ‘ரகசிய வேலைகளில்’ ஈடுபடுவதும் இல்லை. இருவரையும் லிஸ்பன் நீதிம்ன்றத்தில் நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தது போர்ச்சுகல் அரசு.

அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்ட ரீதியாக கடும் முயற்சிக்குப் பின்னரே இந்தியாவிற்கு கொண்டு வந்தது ம.பு.க. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சலீமிற்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை ‘மிகச் சிரமப்பட்டு’க் கொண்டுவந்து தாக்கல் செய்த பின்னரே சில நிபந்தனைகளுடன் சலீமை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சலீம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், விசாரணை நடத்தும் போது சித்ரவதைக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும் இந்தியா சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சலீமை நாடு கடத்த லிஸ்பன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இப்படி சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் அது சார்ந்த நடைமுறைகளும் உள்ள இன்றைய உலகில், 257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு தாதாவை நாடு கடத்தவே ஒப்புதல் வாக்குமூலங்களை தாக்கல் செய்து சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் - மற்ற தெற்காசிய அரசுகளின் உதவியோடு - கடத்தி‌ச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?

செல்வராசா பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசக் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிக்க இருக்கின்றதென்றால், அவரை மலேசிய நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கொள்ளைக் கும்பல்களும், கடத்தல் பேர்வழிகளும் செய்வதைப் போல, சற்றும் வெட்கமின்றி இரு அரசுகளின் அயல் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து (இது மலேசிய காவல் துறைக்குக் கூட தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாகத் தகவல்) ஆள் கடத்தல் செய்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அந்த இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளுடன் அரசு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே செல்வராசா பத்மநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து செயல்படாமல், வெளிப்படையாகவே செயல்பட்டு வந்துள்ளார்.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இறுதிக் கட்டப் போரின்போது, தங்கள் மக்களைக் காக்க சரணடைய விடுதலைப் புலிகள் முடிவு செய்தபோது, அதற்கான நடைமுறைகளில் மனித உரிமை அமைப்புகளோடும், அரசுகளோடும் தொடர்பு கொண்டு வெளிப்படையாக பத்மநாதன் செயல்பட்டார்.

அப்போதெல்லாம் சர்வதேசக் காவற்படைக்குத் தெரிவித்து கைது செய்திருக்கலாமே? சட்டத்திற்குப் புறம்பாக கடத்திக் கொண்டுவந்தப் பிறகும், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு எடுக்காமல் மறைவிடத்திற்குக் கொண்டு சென்று விசாரிப்பதேன்.

ஏனென்றால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்பதே! அதைத்தான் ஒளிவு மறைவு ஏதுமின்றி “இனி விடுதலைப் புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது” என்று பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.

“பிரபாகரனையும், அவருடைய தளபதிகளையும் பூண்டோடு அழித்த பிறகும், அயல் நாடுகளில் இருந்து செயல்படும் அரசை அறிவிக்க பத்மநாதன் தயங்கவில்லை. அவர் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் பொசுக்கப்பட்டுவிட்டது” என்று சண்டே அப்சர்வருக்கு அளித்த பேட்டியில் சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியுடன் கூறியுள்ளார் கோத்தபய ராஜபக்ச.

சம உரிமை கோரி ஈழத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கொச்சைபடுத்தி, அதனை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி, நிராயுதபாணியாக நின்ற ஐம்பதினாயிரம் தமிழர்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப் படுகொலை நடத்தி முடித்த அரச பயங்கரவாத சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் தெற்காசிய அரசுகள், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டு மேற்கொண்டுள்ள இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஐ.நா.வும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கண்டிக்க வேண்டும்.

தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை.

செல்வராசா பத்மநாதன் என்ற ஒரு தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும், உயிருக்கும் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அது உலகளாவிய அளவில் தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் விடப்பட்ட சவாலாகவும் அதன் எதிர்வினை சட்டத்தின் மீதும், மானுட மாண்புகளின் மீதும் தமிழருக்கு உள்ள நம்பிக்கையையும், ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

செல்வராசா பத்மநாதனை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவராகவே கருதி சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவும், மலேசியாவும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. விளக்கம் கோர வேண்டும். இன்று தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறிலங்கா, மலேசியா போன்ற தமிழர் விரோத அரசுகள் செய்யும் நடவடிக்கை அதற்குரிய எதிர்வினையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு உலக நாடுகளும், ஐ.நா.வும் செயல்பட வேண்டும்.

Saturday, August 1, 2009

மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்துவதை தடுக்க முடியாது - உய‌ர்நீ‌திம‌ன்ற‌ம்

சென்னையில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்துவதை காவ‌ல்துறை தடுக்க முடியாது என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பளித்துள்ளது.

இன்புளுவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நரேஷ்குமார் உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே `இன்புளுவன்ஸ் ஸ்பா' என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது. இப்படி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்வதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே, இதுபோன்ற மசாஜ் பார்லர் நடத்துவதற்கு சட்டப்பூர்வமாக தடை இல்லை. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து அமைதியாக நடத்துவதில் கா‌வ‌ல்துறை‌யின‌ர் தடையிட கூடாது என்று உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனுவில் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனுவுக்கு பதில் அ‌ளி‌‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் தா‌க்க‌ல் செ‌ய்த மனுவில், மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் சட்டப்படி உரிமம் பெற வேண்டும். பொதுநலனை கருத்தில் கொண்டும், சமூக ஒழுக்கத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் மசாஜ் மையங்களுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்.

மனுதாரர் தனது மசாஜ் கிளப்பில் டீன்ஏஜ் பெண்களை வைத்து மசாஜ் செய்தால் அங்கு வரும் நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற மசாஜ் பார்லர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கே.சந்துரு அ‌ளி‌த்த தீர்ப்‌பி‌ல், ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் ஹெல்த் கிளப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் எதுவும் இல்லை. சென்னை மாநகர காவ‌ல்துறை சட்டத்திலும், இதுபோன்ற மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதிலிருந்து மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுக்க காவ‌ல்துறை‌க்கு சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்பது தெளிவாகிறது. இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் மசாஜ் பார்லர் நடத்தலாம். அதே நேரத்தில் அந்த மசாஜ் மையங்களை ஆய்வு செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவ‌‌‌ல்துறைக்கு எந்த தடையும் இல்லை எ‌ன்று ‌நீ‌திப‌தி தீர்ப்ப‌ளி‌த்தா‌ர்.