Friday, April 23, 2010

உயிருக்கு விலைபேசும் ஆய்வகங்கள் :தினமலர்

அடிப்படை வசதியின்றி, தகுதியான லேப் டெக்னீசியன் இன்றி தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும், ரத்தப் பரிசோதனை ஆய்வகங்களை கட்டுப்படுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரத்தவங்கி துவங்க, மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக அனுமதி பெறவேண்டும். மருந்து கடை அமைக்க தமிழக மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குனர் அனுமதி பெறவேண்டும். ஆனால் ரத்தமாதிரியை பரிசோதனை செய்யும் ஆய்வகங்களை வரைமுறை படுத்த எந்தவித நடைமுறையும் இல்லை. சிறுதொழிலுக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டும் பெற்று, யார் வேண்டுமானாலும் ஆய்வகம் துவக்கலாம். அதுவும் உள்ளூரிலேயே இச்சான்றிதழைப் பெறலாம். பெட்டிக்கடை, டீக்கடைக்கும் இச்சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது. ஒரு மைக்ரோஸ்கோப், சில ரசாயன மருந்துகள், ஒரு சிறிய அறை இருந்தால் கூட உடனடியாக இந்த சிறுதொழிலுக்கான அனுமதி கிடைத்து விடுகிறது.

நிறைய ஆய்வகங்கள் ஒரே அறையில், சிறு கழிப்பறையுடன் செயல்படுகின்றன. லேப் டெக்னீசியனுக்கு படித்தவரா, அனுபவ அறிவு உள்ளதா என்ற அடிப்படை தகுதி கூட ஆய்வகத்துக்கு தேவையில்லை. தரக்கட்டுப்பாடு குறித்து அரசும் கவலைப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பும் இல்லை. கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் ரத்த, சிறுநீர் பரிசோதனை செய்பவர்களின் நிலை என்னவாகும்? சிறிய கிளினிக் வைத்துள்ள டாக்டர்கள் கூட, இத்தகைய ஆய்வகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, நோயாளிகளை பரிந்துரை செய்கின்றனர். ரத்த மாதிரியின் உண்மையான ஆய்வு குறித்தும் கேள்விக்குறியாக உள்ளது. தவறாக பகுப்பாய்வு செய்திருந்தால், தவறான சிகிச்சை பெற்ற நோயாளியின் உயிருக்கு உலை வைத்துவிடும்.

சில ஆய்வகங்களில் எக்ஸ்ரே, இ.சி.ஜி., வசதியும் உள்ளது. அதைக் கையாள தகுதியான நபர்களை நியமித்து உள்ளனரா என்பது தெரியவில்லை. ஆய்வகத்தில் இவர்களின் செயல்பாடுகள் போலி மருந்து, காலாவதி மருந்துகளைப் போல, நோயாளிகளின் உயிருக்கு விலை பேசும், ஆய்வகங்களையும் அரசு முறைப்படுத்த வேண்டும். அனைத்து வசதிகளுடன் செயல்படும் ஆய்வகங்களுக்கு தரப்படும் சிறுதொழிலுக்கான சான்றிதழுக்கு பதில் சுகாதாரத்துறையின் முறையான அங்கீகாரம் வழங்கவேண்டும்.