மனித வளர்ச்சியின் அடிப்படையை ஆராய்ச்சி செய்த மாஸ்லோ எனும் உளவியல் விஞ்ஞானி முதன்முதலாக தேவைகள் எனும் அடிப்படைத் தத்துவத்தை உருவாக்கினார். இன்றளவும் அது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு தத்துவம். அதன்படி மனிதன் அடிப்படையில் பல தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே தனது வாழ்க்கையைச் செலவிடுகிறான். அடிமட்டத்தில் தேவை உணவு. அது நிறைவடைந்தவுடன் பாதுகாப்பு. பின் அன்பு, பாசம், அதற்குப் பிறகு புகழ், மரியாதை என தேவைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. அதாவது பணம் சேர்த்தாகிவிட்டது, ஆனால் புகழ் வேண்டும். அதற்குத் தேர்தல் ஒருவழி. பல போஸ்டர்கள், கட்அவுட்களில் போஸ் கொடுக்கலாம், பத்திரிகைகளில் பெயர் வரும். டிவியில் வரலாம் எனும் ஆசை.
அதேபோலத்தான் வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் பெறும்போது பட்டமும் பதவியும் வேண்டுமென்று மனம் துடிக்கிறது. பெருந்தலைவர் காமராஜ் படித்துப் பட்டம் பெற்றவரல்லர். ஆனால், அவரிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கவில்லை. தனக்கு எந்தப் பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் தரவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அப்படியே தருவதாகச் சொல்லியிருந்தால் கூட அது தேவையில்லை என்று மறுத்திருப்பார். நேருவுக்கும் இந்திராகாந்திக்கும் உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தந்து கெüரவித்தன. ஆனால் அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக் கொள்ளவில்லை. கௌரவ டாக்டர் பட்டம் பெறுபவர்கள் அப்படிப் போட்டுக்கொள்ளும் வழக்கமும் கிடையாது.
தமிழக அரசியலாரில் நிறைய பேர் தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் கடமை என்று நினைத்தது மட்டுமன்றி, "டாக்டர்' என்று தங்களது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதைப் பெருமையாகக் கருதினர். அதற்குக் காரணம் தாங்கள் பட்டதாரிகள் அல்ல என்கிற அவர்களுடைய தாழ்வு மனப்பான்மைதான். பணம் சம்பாதித்துவிட்டதால் சமுதாய அங்கீகாரம் தேடுவது என்பது உளவியல் விஞ்ஞானி மாஸ்லோ கூறுவதுபோல ஒருவித மனித மனதின் விலங்கியல் உணர்வு. அதனால்தான் இவர்கள் அரசியல் அங்கீகாரம் பெறத்துடிக்கிறார்கள். அந்த பலவீனத்தை சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தக் கேலிக்கூத்துகள் தொடர்கதைதானா, முடிவே கிடையாதா?
Thursday, June 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment