Tuesday, June 2, 2009

போருக்குப்பின்......

ஹிட்லர் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும், ஜெர்மனியை நேசநாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் சார்புடைய அராசாங்கம் மேற்கு ஜெர்மனியிலும், ரஷிய சார்புடைய அரசாங்கம் கிழக்கு ஜெர்மனியிலும் அமைக்கப்பட்டன. ஜெர்மனி தலைநகரமான பெர்லின், குண்டு வீச்சின் காரணமாகப் பாழடைந்துபோய் விட்டது.

அந்த நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்கு பெர்லின் மேற்கு ஜெர்மனியிலும், கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியிலும் சேர்க்கப்பட்டன. 1950-ல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க கிழக்கு பெர்லினையும், மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது.

பெர்லின் சுவர் என்று இது அழைக்கப்பட்டது. அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிக மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்தானே. இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று இரு நாடுகள் இடையேயும் 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 1990 அக்டோபர் 3-ந் தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.

பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. அணுகுண்டு வீச்சினால் பேரழிவுக்கு உள்ளான ஜப்பான் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு பொருளாதார துறையில் படிப்படியாக முன்னேறியது. ஜப்பானிய மக்களின் அயராத உழைப்பினால், இன்று உலகிலேயே எலக்ட்ரானிக் துறையில் தலை சிறந்து விளங்குகிறது. உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. போரின் போது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் தோளோடு தோன் நின்று ஹிட்லரை எதிர்த்துப்போர் புரிந்த ஸ்டாலின், பின்னர் ரஷியாவில் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டிவிட்டு சர்வாதிகாரியானார். ரஷியாவில் நடப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. ரஷியாவில் இரும்புத்திரை போடப்பட்டு விட்டதாக சர்ச்சில் வர்ணித்தார்.

இரண்டாவது உலகப்போரின்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை இங்கிலாந்து கோரியது. போர் முயற்சிகளில் பிரிட்டனுக்கு இந்தியா ஆதரவாக இருந்தால் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் டொமினியன் அந்தஸ்து கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இது சம்பந்தமாக 1942 மார்ச் மாதத்தில் இங்கிலாந்து மந்திரி கிரிப்ஸ் இந்தியாவுக்கு வந்து காந்தியையும், மற்ற தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உலகப்போரில் ஹிட்லருடன் சேர்ந்திருந்த ஜப்பான், தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றது. பிரிட்டன் வசம் இருந்த மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை கைப்பற்றியது. இந்தியா மீதும் ஜப்பான் படையெடுக்கலாம் என்றும் கருதப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வருவதால்தான் ஜப்பானியர் இந்த நாட்டின் மீது படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து பிரிட்டிஷார் உடனே வெளியேற வேண்டும் என்று காந்தி அறிக்கை வெளியிட்டார். வெள்ளையனே வெளியேறு என்று புகழ் பெற்ற தீர்மானத்தை 1942 ஆகஸ்டு மாதத்தில் காங்கிரஸ் நிறைவேற்றியது. எனினும் இந்திய இளைஞர்கள் பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்து போர் முனைக்கு சென்றார்கள். குறிப்பாக ஜப்பானை எதிர்த்துப் போர் புரிய சிங்கப்பூர், மலாயா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட படைகளில் இந்திய இளைஞர்கள் அதிக அளவில் இருந்தனர். யுத்த காலத்தில் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவுக்கு ரேஷன் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் அரிசிக்கு ரேஷன் அமுலாகியது. வரவர அரிசியின் அளவு குறைக்கப்பட்டு கோதுமை, மக்காச்சோளம் ஆகியவை தரப்பட்டன. கடைகளில் ரொட்டி வாங்க வேண்டும் என்றால் கூட அரிசியைக் குறைத்துக் கொண்டு அதற்கு சமமான கூப்பனை பெற்றுக்கொண்டு அதைக் கொடுத்துத்தான் ரொட்டி வாங்க முடியும், சென்னை, மதுரை, திருச்சி, கோவை முதலிய நரங்களில் பாதுகாப்பு குழிகள் வெட்டப்பட்டன. அடிக்கடி அபாயச் சங்கு ஊதி ஒத்திகை பார்ப்பார்கள். அப்போது ரோட்டில் நடந்து போகிறவர்கள். பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொள்ள வேண்டும்.

இரவில் விளக்கு வெளிச்சம் எதிரி விமானங்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக, தெரு விளக்குகளுக்கு மேல் கறுப்பு மூடிகள் போடப்பட்டன. கச்சா பிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சினிமா படங்களை நீளமாகத் தயாரிக்க தடை போடப்பட்டது. 13 ஆயிரம் அடிக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு விடப்பட்டது. இந்த உத்தரவு, நல்லதாகவும் அமைந்தது. படங்களில் பாடல்கள் குறைக்கப்பட்டு விறுவிறுப்பு கூடியது. மிகப்பெரிய வெற்றிப்படங்களான ஹரிதாஸ் ஸ்ரீவள்ளி நாம் இருவர் ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் குறைந்த நீளத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.

No comments:

Post a Comment