Sunday, March 14, 2010

உங்களுக்கு எவ்ளோ கடன் தெரியுமா?

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறதாம், அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கூடதான்! அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளதாம். இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது. இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக் கும் என்பது தான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது. 1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது. கடந்த 2006ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53 ஆயிரத்து 526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 155.84 கோடி ரூபாய் தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட தி.மு.க., ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.

பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம். ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில் தான் விடியும். மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர். மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது. கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது. அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில் தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமை தான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.

1 comment:

Post a Comment