Tuesday, March 9, 2010

பெண்களுக்கான 33% வரமா? சாபமா?

1997ஆம் ஆண்டிலிருந்து பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. இன்றைக்கு எந்த அடிப்படையில் அதன் நிறைவேற்றத்தை சமாஜ்வாடி, இராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் (தி.மு.க.வும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது) எதிர்க்கின்றனவோ அதே காரணத்திற்காகவே இன்றும் எதிர்க்கின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பெண்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்களிக்க வேண்டும் என்பதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. ஆனால், இந்தியாவைப் போன்ற சாதிய சமூதாயம் நிலைபெற்றுள்ள ஒரு நாட்டில் உண்மையான பிரதிநிதித்துவம் எல்லா சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டுமெனில், உள் ஒதுக்கீடு - அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம், கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கும் - உரிய விழுக்காட்டளவில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

அதனால்தான், இக்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டை காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக எதிர்த்து எந்த விளக்கத்தையும் தர மறுக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேண்டும், பிறகு உள் ஒதுக்கீட்டை செய்துக்கொள்ளலாம் என்பது. ஆனால், அதனை முதலிலேயே செய்து நிறைவேற்றிட வேண்டும் என்பது எதிர்க்கும் கட்சிகளின் நிலைப்பாடாகும். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்போர், நாட்டின் நலனுடன் தாங்கள் சார்ந்த மாநிலத்தின் நலனையும், அத்தோடு இந்நாட்டின் உற்பத்தியில் தங்களின் உழைப்பின் மூலம் பெரும் பங்கு அளிக்கும் அனைத்து சமூகத்தின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும். அந்த நிலை நமது நாடாளுமன்றத்தில் நிலவ வேண்டுமெனில், பெண்கள் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து அதனை நிறைவேற்றலாம். அதிகாரமயமாக்கல் என்பது அனைத்துத் தட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்வதால், அது ஜனநாயக ரீதியான உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கும் பதில் தேட வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது. ஊராட்சி மன்றம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சிகளில் தற்போது பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் காரணமாக, மக்களுக்கு தொண்டு செய்யும் அந்த அதிகாரத்தில் வந்த அமர்ந்துள்ள பெண்களெல்லாம் யார் என்று ஆராய்ந்தால், அவர்கள் அனைவரும் எந்தக் கட்சியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டார்களோ, அந்தக் கட்சியின் அப்பகுதியில் முக்கியப் பிரமுகரின் மனைவியாகவே, பெண்ணாகவோ அல்லது உறுப்பினராகவோதான் இருக்கின்றனர். பெண்கள் ஒதுக்கீடு இல்லாமல், தேர்தல் நடந்திருந்தால் யார் அந்தந்தக் கட்சிகளின் சார்பாக நின்றிருப்பரோ அவர்களுடைய மனைவி அல்லது குடும்பத்தார்தான் இந்த ஒதுக்கீட்டின் மூலம் தேர்தலில் நின்று பதவிக்கு வந்துள்ளனர். இந்த நிலையை மாற்றக் கூடிய ‘சக்தி’ பெண்கள் ஒதுக்கீட்டை ஆதரிக்கும், எதிர்க்கும் எந்தக் கட்சிக்காவது இருக்கிறதா?

மனைவி பதவியில் இருக்கிறார், பின்னால் இருந்து கட்சிக்கார கணவன் இயக்குகிறார்! பெண்கள் ஒதுக்கீடு உள்ளாட்சி நிர்வாகத்தில் சாதித்துள்ளது இதுதான். எனவே, இதுநாள் வரை எது உள்ளாட்சி நிர்வாகங்களில் நடந்து கொண்டிருக்கிறதோ அதுவே நாளை நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் நடைபெறப் போகிறது! ஏற்கனவே நமது நாட்டு அரசியல் ஜனநாயகம் என்பது பிரதமர் பதவியிலிருந்து முதல்வர், அமைச்சர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆவது வரை குடும்ப ஜனநாயகமாகத்தான் இருக்கிறது. இதில் பெண்களுக்கான ஒதுக்கீடும் வந்துவிட்டால் அது ‘குடும்ப ஜனநாயக சாம்ராஜ்’யங்களை மேலும் பலப்படுத்தத்தான் உதவுமே தவிர, அது எந்த விதத்திலும் பெண்களை அதிகாரமயமாக்க உதவப் போவதில்லை. நமது நாட்டின் அரசியல் போக்கு அப்படி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸில் இருந்து பா.ஜ.க., கம்யூனிஸ்ட் வரையிலான தேசியக் கட்சிகளிலிருந்து தி.மு.க., பிஜூ ஜனதா தளம் வரையிலான மாநிலக் கட்சிகள் வரை பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை உள்ளனவாக இருந்தால், அதில் ஒரு நிபந்தனையைச் சேர்க்க வேண்டும். ஒரு குடும்பத்திலுள்ளவர் தேர்தல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட உறுப்பினராக நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டப் பேரவையிலோ அல்லது உள்ளாட்சி நிர்வாகத்திலோ அல்லது பிரதமராகவோ, முதல்வராகவோ அல்லது அமைச்சகராகவோ இருந்தால் அவருடைய இரத்த உறவினராக உள்ள பெண்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையைச் சேர்க்க வேண்டும்.

ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் அவ்வாறு பதவியில் இருந்தாலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ கூட தேர்த‌லில் போட்டியிட முடியாது என்ற நிபந்தனையும் இருக்க வேண்டும். அப்போது அரசியல் கட்சி, குடும்ப செல்வாக்கு வளையத்திற்கு வெளியே உள்ள பெண்களுக்கு வாய்ப்பும் கிடைக்கும், குடும்ப அரசியலிற்கும் ஒரு முடிவும் ஏற்படும்.

3 comments:

KATHIR = RAY said...

33% Female + 33% Operational Male = 33% Pengalukkaana Ida Othukeedu.

33% Kollayadikkum Pinamikal uruvaga poguthu

KATHIR = RAY said...

Pengalaukku matrum Avargal Kudumbathirku VARAM

Makkalukku SAABAM

Prabu M said...

இங்கு சட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது என் கருத்து நண்பா..
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்

Post a Comment