Monday, August 24, 2009

ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ - ஓர் பார்வை

குழந்தைகளின் வாழ்வை சிறுவயதிலேயே பறிக்கும் போலியோ என்ற முடக்குவாத நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் தனது கண்டுபிடிப்பை காப்புரிமை செய்ய மறுத்து விட்டார். காரணம், "சூரியனுக்கே காப்புரிமை பெறுவது போன்ற செயல் அது" என்று கூறினார்.

ஆனால் இன்று உலகம் முழுதும் மனிதர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற காய்ச்சல, கொள்ளை நோயாக பரவி வரும் வேளையில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டிய அறவியல் ரீதியான கட்டாயம் ஏற்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ என்ற வணிக முத்திரையில் விற்கப்படும் ரோச் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மருந்தின் மூலப்பொருளை உற்பத்தி செய்து அந்த மருந்தை எளிதில் குறைந்த விலைக்கு கிடைக்குமாறு செய்ய ஏன் முடியவில்லை?

ஏனெனில் இந்த மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறும் ரோச் நிறுவனம் அதன் காப்புரிமையை வைத்துள்ளது. மிகப்பெரிய கொள்ளை நோயாக ஸ்வைன் ஃப்ளூ உருவாகி வரும் வேளையிலும் உலக சுகாதார அமைப்பு இந்த காப்புரிமை என்ற லாப வேட்டைக் குறிக்கோளை தளர்த்த முயலவில்லை.

நாம் வாழும் இன்றைய உலகின் மிகப்பெரிய மோசடி என்னவெனில், உயிரைக் காப்பாற்றக்கூடிய எந்த ஒரு மருந்தையும் ஏழை நாடுகள் தாங்களாகவே தயாரித்து சுய நிறைவு எய்த முடியாது என்பதே.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள வசதிகளின் படி டாமிஃப்ளூவை இன்று குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் உற்பத்தி செய்யக்கூடாது என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. ஏனெனில் பண்ணாட்டு நிறுவங்களின் காப்புரிமையையும், லாப நோக்கையும் காப்பதுதான் அதன் பணி! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஸ்வைன் ஃப்ளூ ஒரு மக்கள் தொகை அழிப்பு எந்திரமாக உருமாறி வருவதிலிருந்து ஏழை நாடுகள் தப்பிப்பதற்கான மாற்று வழி இருந்தும் அதனை நாம் செய்து மக்களை இந்த கொடிய நோயிலிருந்து காப்பற்ற முடியாச சூழ்நிலையில் வாழ்கிறோம்.

மும்பை, புனே போன்ற பகுதிகளில் டாமிஃப்ளூ கள்ளச்சந்தையில் நாம் கற்பனை செய்ய முடியாத விலைக்கு விற்கப்படுவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகம். அரசு மருத்துவமனையிலிருந்து பேராசை பிடித்த சில சக்திகள் டாமிஃப்ளூவை எடுத்து வெளியில் விற்கும் ஒரு போக்கையே இது காண்பிக்கிறது.

இந்த நிலையில் டாமிஃப்ளூவின் உட்பொருளை அந்தந்த நாடுகளே தயாரித்து அதனை வணிக முத்திரையற்ற மூலப்பெயரில் விற்கும் உரிமையை வலியுறுத்துவது உலக நாடுகளின் கடமையாகும். ஏழை நாடுகளுக்கு ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பரவி உயிர் பலி பெரிய அளவிற்கு ஏற்படக்கூடும் என்று சில மாதங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்த உலகச் சுகாதார அமைப்பு, ஏன் அதற்கு தீர்வாக அமையும் ஒரு மருந்தினை அந்த நாடுகள் தயாரிக்க அனுமதிக்கவில்லை?

மருந்து ஆராய்ச்சி அல்லது உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான ஆய்வு பெரும்பாலும் வெளி நாடுகளில் அரசு நிதி உதவியுடன் நடைபெறும் பல்கலைக் கழங்களில் நடத்தப்படுகிறது. விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டு ஒரு உயிர் காக்கும் மருந்தை பல ஆண்டு உழைப்பில் கண்டு பிடிப்பதன இறுதித் தறுவாயில் மருந்து நிறுவனம் ஒன்று நுழையும், செலவுகளில் பாதியை கொடுக்கும், அதாவது ராசயனத்திற்கான செலவுகள், பரிசோதனை நடத்துவதற்கான செலவுகள் ஆகியவற்றை ஏற்கும். ஆனால் இறுதிக் கட்டத்திற்கு முந்தைய மிகப்பெரிய செலவுகள் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. அது மக்கள் வரிப்பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த செலவுகளை ஏற்று அந்த குறிப்பிட்ட உயிர் காக்கும் மருந்திற்கான உற்பத்தி மற்றும் விற்பனை உரிமையை தனதாக்கிக் கொண்டு காப்புறுதி என்ற பெயரில் அடுத்தவர்களை நெருங்க விடாமல் லாபங்களை கொள்ளை கொள்ளையாக குவிக்கும். கொள்ளை நோய் என்பதன் இன்னொரு அர்த்தம் இது போண்ற நிறுவனஙளின் கொள்ளை லாப நோய் என்றே கூட நாம் மறுப் பெயரிடலாம்.

தென் ஆப்பிரிக்காவில்தான் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். தன் நாட்டு நோயாளிகளுக்கு தாங்களே மருந்து உறுபத்தி செய்யும் உரிமை அந்த நாட்டிற்கு கிடையாது. எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் அந்த காப்புரிமை பெற்ற மருந்தை தென் ஆப்பிரிக்கா உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மருந்தின் காப்புரிமை பெற்றிருந்த அந்த நிறுவனம் தென் ஆப்பிரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது.

ஆண்டொன்றிற்கு நோயாளி ஒருவருக்கு 100 டாலர்களில் முடிய வேண்டிய செலவை, 10,000 டாலர்களுக்கு ஆண்டு தோறும் மருந்தை இறக்குமதி செய்யவைத்தது அந்த நிறுவனம். உயிர்க்கொல்லி நோய்களால் அவதியுறும் ஏழை மக்களை உயிர்காப்பு மருந்துகள் நெருங்க விடாமல் தடுக்கப்படுகின்றன. அப்படியே இந்த மருந்தை இந்தியா போன்ற நாடுகள் உற்பத்தி செய்தாலும் அதன் அதிகாரம் ஒரு நிறுவனத்திற்கே வழங்கப்படும், அந்த நிறுவனம் காப்புரிமை பெற்ற நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை அளிக்கவேண்டி வரும். இதனால் யாரும் இதில் இறங்குவதில்லை.

எந்த ஒரு உயிர்க்கொல்லி நோயும் கொள்ளை நோயாக உலகம் முழுதும் பரவும் போதும் அந்த குறிப்பிட்ட நாடுகள் அந்த மருந்தின் நகலை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டியது இன்றைய கட்டாயத் தேவையாகும். சந்தைப் பொருளாதாரத்தில் போட்டிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்று கூறும்போது, அங்கு ஒட்டு மொத்த உரிமையை எப்படி ஒரே நிறுவனம் வைத்திருக்க அனுமதிப்பது?

தென் ஆப்பிரிக்க விஷயத்தில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்த மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி எழும் போது ஏழை நாடுகள் உயிர்காக்கும் மருந்தின் நகலை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று நாடுகளிடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்த ஒப்புதலின் அடிப்படையில் இன்று இந்தியா டாமிஃப்ளூவின் 'ஜெனிரிக்' வடிவத்தை தயாரித்துக் கொள்ளலாம். அதாவது காப்புரிமை வைத்திருக்கும் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒரே தவணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு தயாரித்துக் கொள்வது. ஒரு சில நிறுவனங்களுக்கு இதன் உற்பத்தி உரிமைகளை காப்புரிமை பெற்ற நிறுவனம் அளிக்க முன் வந்தாலும், அதற்கான உரிமம் பெற ஒரு பெரிய தொகையை அளிக்கவேண்டும். இதனால் அதுவும் பயனில்லாமல் போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அல்லது மருந்து அது தேவைப்படும் அளவிற்கு கிடைக்காமல் போக வாய்புள்ளது.

ஆனால் இந்த பொதுச் சுகாதார நெருக்கடி எது என்பதை உலக சுகாதார அமைப்பே தீர்மானிக்கும். இது போதாதா? ஸ்வைன் ஃப்ளூ பரவல் நெருக்கடி நிலைக்கு உயரவில்லை என்று கூறிக்கொண்டே காலம் கடத்தலாம்.

ஏன் காப்புரிமை வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறீர்கள் என்று அந்த நிறுவனங்களிடம் கேட்டால், 'நாங்கள் ஒன்றும் சும்மா இல்லை, ஏகப்பட்ட உயிர்காப்ப்பு மருந்துகளுக்காக நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம், அவற்றிற்கு ஆகும் செலவு பயங்கரமானது, எனவே நாங்கள் இதிலிருந்து வரும் வருவாயை மீண்டும் ஆய்விற்குத்தான் பயன்படுத்துகிறோம், நிறைய ஆய்வுகள் சந்தைக்கு கொண்டு செல்லும் மருந்துகளாக முடிவதில்லை. இது ஒரு மிகப்பெரிய நடைமுறை அதிகம் செலவாகும்' என்று கூறுவார்கள்.

ஆனால் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் மருந்துவ இதழில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் ஒருவர் இது பற்றி முழு விரிவாக ஆய்வு நடத்தியுள்ளார். மருந்து நிறுவனங்களின் பட்ஜெட்டில் 12 முதல் 14 விழுக்காடு வரையே புதிய மருந்து ஆய்விற்கு செலவிடப்படுகிறது, அதுவும் ஆய்வு நடத்துவது வேறு சிலர். அந்த ஆய்வின் இறுதிக் கட்டத்தில் சென்று ஒரு குறைந்த அளவில் செலவை ஏற்றுக் கொள்கின்றன. இந்த நிறுவனங்களின் ஆய்வுகளெல்லாம் ஏற்கனவே உள்ள சாதாரண மருந்துகளில் புதிதாக ஒரு ரசாயனத்தைச் சேர்த்து ஏற்கனவே மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள் பயனற்றவை என்று கூறி முழு காப்புரிமையை தன் இந்த புதிய மருந்திற்கு பெறுவதே என்ற அதிரடி உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்.

இதனால் மனித உயிர்களை கொத்துக் கொத்தாக அழிக்கும் எந்த ஒரு நோய்க்கான தீவிர ஆராய்ச்சியையும் சீரியசாக எந்த பன்னாட்டு நிறுவனங்களும் செய்வதில்லை. மலேரியாவிற்கு என்னவெல்லாமோ மருந்துகள் கண்டுபிடித்தும் இன்றும் அது ஒரு உயிர்க்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. மலேரியா நோய்க்கான மருந்தை விற்று வரும் நிறுவனங்கள் எவ்வளவு லாபம் பார்த்திருக்கும். ஆனால் மலேரியாவை ஒழிக்க அதில் ஒரு சில விழுக்கட்டுத் தொகையினைக்கூட செலவிடுவதில்லை என்பதுதான் இன்றைய இருண்ட உண்மை.

அமெரிக்காவில் இதனை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. கட்சிகளுக்கு மருந்து நிறுவனங்கள் பெரிய அளவிற்கு நிதி கொடுக்கின்றன. அவர்களது தேர்தல் பிரச்சார செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. அமெரிக்காவில் கடைசியாக அமல் செய்யப்பட்ட சுகாதார மசோதா 2003ஆம் ஆண்டு. இதனை பெரிதும் வடிவமைத்தவர்கள் மருந்து உற்பத்தி நிறுவன ஆதரவாளர்களே என்று குடியரசுக் கட்சியின் உறுப்பினர் வால்டர் பர்ட்டன் என்பவர் கூறியுள்ளார்.

இது போன்ற ஒரு அழுகிபோன அமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை சிறிதும் மாறிவிடக்கூடாது என்பதில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக இருந்து வருகின்றன. மனித சமூகத்தின் ஆரோக்கியமும், உடல் நலமும் பெரிதல்ல, மருந்து நிறுவனங்களின் ஆரோக்கியமும், நிதி நிலையுமே முக்கியம். எப்போது மாறப்போகிறதோ உலகளாவிய இந்த இழி நிலை?

2 comments:

ஐந்திணை said...

இந்த நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற நேரங்களில், நோயாளிகள் ஒரே மருத்துவரின் ஆலோசனைகளை பெறவேண்டும்.


இந்நோயை பரப்பும் வைரஸ், குளிர் பருவங்களில் 3 மாதங்கள் வரையிலும், 22 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரில் 4 நாட்களும், 0 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரில் 30 நாட்களும், கைக்குட்டையில் 12 மணி நேரமும், கைகளில் 5 நிமிடமும் உயிர் வாழக் கூடியது

தோழன் said...

முதலாளியத்தின் கோர முகத்தை உறித்து காட்டும் நல்ல பதிவு.

Post a Comment