Friday, August 28, 2009

வி.வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பு வாபஸ் : பட்டியலில் இருந்து 30 பேரை நீக்கியது அரசு!

வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த 30 பேருக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.

தற்போது நாடு முழுவதும் உள்ள வி.ஐ.பி.,களுக்கு எக்ஸ், ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் என்ற நான்கு பிரிவுகளின் கீழ், மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இதற்காக, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிட்டு வருகிறது. வி.ஐ.பி.,களில் சிலர், தங்களது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையிலும், தங்களை பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவும், போலி அந்தஸ்திற்காகவும் பாதுகாப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சில வி.ஐ.பி.,கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரின் சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற உள்ளதாகவும், அதற்கான பெயர் பட்டியலை உள்துறை அமைச்சகம் தயாரித்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவியேற்றதும், "வி.ஐ.பி.,களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்து, சிலருக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு வாபஸ் பெறப்படும் பாதுகாப்பு படையினர், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படுவர். எனக்கும் எந்தவித சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை' என கூறியிருந்தார். இதற்கான பணிகள், கடந்த சில மாதங்களாக சத்தமில்லாமல் நடந்து வந்தன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை நேற்று குறைத்துள்ளது. குறிப்பாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவித்து வந்த, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.எஸ்.சபர்வால் உட்பட 30 வி.ஐ.பி.,களுக்கு அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: வி.ஐ.பி.,களுக்கான பாதுகாப்பை குறைப்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில், எக்ஸ் பிரிவு பாதுகாப்பு பெறுவோரின் பட்டியலில் இடம் பெற்றிருந்த 30 பேருக்கு, அந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எக்ஸ் பிரிவு பாதுகாப்பை அனுபவிக்கும் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.,களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைந்துள்ளது. எக்ஸ் பிரிவு பாதுகாப்பை பெறும் வி.ஐ.பி.,க்கு எட்டு மணி நேரத்துக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு மூன்று பேர் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுவர். இதைப் பின்பற்றி, ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் பிரிவுகளிலும், பாதுகாப்பு அளிக்கும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும். இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாதிரி பாதுகாப்பு குறைக்கப்படும் தலைவர்கள் பெயர் பட்டியலில், உ.பி., அரசியல் பிரமுகர் டி.பி.யாதவ், நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான கோவிந்தா, பா.ஜ., எம்.பி., வருண், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு குறைப்பு தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து, ஏராளமான வி.ஐ.பி.,கள், குறிப்பாக அரசியல்வாதிகள், அதிகாரிகளை தொடர்பு கொண்டு, எங்களுக்கான பாதுகாப்பை வாபஸ் பெற வேண்டாம் என வலியுறுத்த துவங்கியுள்ளனர்' என்றார். மேலும், அதிக பாதுகாப்பு இருந்தால், அவர் செல்வாக்கான அரசியல்வாதி என்ற கருத்து பொது மக்களிடம் ஏற்படும் என்று கட்சிகள் கருதுகின்றன. மத்திய அரசில் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, ஆண்டுதோறும் வி.ஐ.பி.,களின் பாதுகாப்புக்காக செலவழித்து வந்த பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

1 comment:

ttpian said...

சுப்ரமநிய சாமி,துக்லக் சோ,ஜெயா,கருநானிதி-இவர்களுலுக்கு விடுதலை புலிகளால் ஆபத்து என்று பூனைப்படை காவல்:
இப்போது புலிகல் இல்லை
பின் எதற்கு வெட்டி தெண்டம்?
ஒருவேளை இவர்களுக்கு தமிழர்களால் ஆபத்தோ?

Post a Comment