Monday, February 8, 2010

திருட்டு விசிடி-க்கு ஆப்பு வைக்கும் யோசனைகள் சில...

நாட்டுப்புறக் கலைகள் மட்டுமே இருந்த காலத்தில் திரைப்படம் வந்தபோது, நமது கிராமியக் கலைகள் பாதிக்கப்படத்தான் செய்தன. பிறகு வானொலி, பிறகு தொலைக்காட்சி வந்தபோது திரைப்படங்கள் பாதிக்கப்பட்டன. இப்போது அதைவிட நவீனமாக இணையதளங்கள் வந்துவிட்டன. இணைய தளங்களில் வீட்டில் இருந்தபடியே புத்தம்புது திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்துவிடலாம். வெளிநாடுகளில் பெரும்பாலானவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். இதுவும் ஒருவகையில் முறைகேடானதே.

விசிஆர் வந்தபோதும் பல புதிய திரைப்படங்கள் கடைகளில் வாடகைக்கு கிடைக்கத்தான் செய்தன. பின்னர் விசிடி இப்போது டிவிடி. உரிமை மீறல் குற்றங்களுக்காக அந்த காலத்திலிருந்தே பல கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி, பல திருட்டு விடீயோ காஸட்டுகளையும், இப்போது பல திருட்டு விசிடி-களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

எந்தவொரு புதிய ஊடகம் வந்தாலும், அதற்கு முந்தைய ஊடகத்திற்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும். இதை தவிர்க்க முடியாது. நாட்டில் யாருமே டிவிடி-களையோ, விசிடி-களையோ பார்க்கக்கூடாது என்று தடை விதிக்க முடியுமா என்ன? உரிமை மீறலை தடுப்பதற்கு ஒரேஒரு வழிதான் இருக்கிறது.

திரைப்படம் வெளியாகும்போதே அதன் டிவிடி-களையும் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துவிடவேண்டும். அதேபோல புத்தம்புது திரைப்படங்களையும் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என்று வகை செய்யவேண்டும். இப்படிச் செய்தால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திருட்டு விசிடி-கள் அல்லது திருட்டு பதிவிறக்கம் மூலம் இழப்பு ஏற்படாது. இதைவிட்டு விட்டு அங்கொன்றும்-இங்கொன்றுமாக திருட்டு விசிடி-க்களை பறிமுதல் செய்துவிடுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை.

திருட்டு விசிடி-க்களை விற்பவர்களை பொறுத்தவரையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படம் அவர்கள் கைக்கு எப்படி போகிறது என்பதை பார்க்கவேண்டும். அவர்களுக்கு படத் தயாரிப்புச் செலவு இல்லை. ஆக மிகக் குறைந்த லாபம் கிடைத்தாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் இழப்பு முழுவதையும் ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆக திரைப்படம் வெளியிடும்போதே விசிடி உரிமைகளையும் விற்பனை செய்து, விசிடி-க்களையும் திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடுவதுதான் புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment