Wednesday, December 2, 2009

புதிய விக்கிரமாதித்தன், வேதாளமும் பழைய காதையும்

தனது அதிகாரத்தை ஏற்காமல், விடுதலைக்காகப் போராடிய தனது நாட்டு மக்களையே துரத்தியடித்து அழித்து, அதனையே ஒரு மாபெரும் வெற்றியாக கொண்டாடிய வேதாளம், இலங்கை ஆரண்யத்தில் தனது காட்டாட்சியை நீட்டித்துக் கொள்ள தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில், தனக்கு கீழிருந்த பிசாசே தன்னை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததால் ஆடிப்போயுள்ள வேளையில், அதற்கு ஆதரவாக விக்கிரமாதித்தன் களமிறங்கியுள்ளது கொழும்புக் கதையில் ஒரு சுவராஸ்யமான திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை வெளியான நெம்பர் ஒன் தேசிய நாளிதழில் விக்கிரமாதித்தன் எழுதிய தலையங்கக் கதையை விவரம் அறியாதவர் யார் படித்தாலும், விக்கிரமாதித்தனின் 'அக்கறை' புரியாமல் குழம்பியிருப்பார்கள். அப்படிக் குழம்பியிருப்போரை தெளிவுபடுத்துவது விக்கிரமாதித்தனை நன்கு அறிந்த நமது கடமையல்லவா?

வேதாளம் எழுப்பிய எத்தனையோ கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த விக்கிரமாதித்தனைப் பற்றி, அதுவும் அவன் எழுதியுள்ள தலையங்கத்தைப் பற்றி, சில கேள்விகள் எழுப்பாமல் விட்டால், புரியாத கதை படித்த குறை ஏற்படும் அல்லவா?

இலங்கை ஆரண்யத்தை தொடர்ந்து ஆள முடிவு செய்த வேதாளத்தை எதிர்த்து, அதனோடு இணைந்து தமிழர்களை பங்கு போட்டுச் சாகடித்த பிசாசு, தேர்தலில் நிற்பது என்றால், அதுவும் அதற்கு மற்ற எதிர்க்கட்சிக் காட்டேரிகள் ஆதரவு தெரிவிப்பது என்றால் என்ன அர்த்தம்? அப்பட்டமான சந்தர்ப்பாவாதமல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விக்கிரமாதித்தன்!

அந்த அளவோடு விக்கிரமாதித்தன் நின்றுவிடவில்லை. தனது சிங்களப் பெளத்த பேரினவாதப் பிடியில் இருந்து விடுதலைப் பெற போராடிய தனது நாட்டு மக்களை, அக்கம்பக்கத்து ஆரண்யங்களில் இருந்து ஆயுதங்களைப் பெற்று, கண்மூடித்தனமாக வேதாளம் அழித்தபோது, அதன் கட்டளையை ஏற்றுக் கொன்று குவித்த பிசாசு என்ன பேசியது என்பதை விக்கிரமாதித்தான் இப்போது நினைவுப்படுத்தி காட்டுகிறார்.

“இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியதே என்று நான் ஆழமாக நம்புகிறேன், தமிழர்கள் தாங்கள் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து எங்களோடு வாழலாம். ஆனால் சிறுபான்மை என்ற காரணத்தைக் காட்டி தங்களுக்கு உரிமையற்ற எதையும் கேட்கக்கூடாது” என்று இன அழிப்பு உச்சக்கட்டத்தில் நடந்தபோது பிசாசு பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்படி தனது சிங்கள இன வெறியை அம்பலப்படுத்திய பிசாசு, இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறது என்று அங்கலாய்க்கிறார் விக்கிரமாதித்தன்.

என்னே விநோதம்! அன்றைக்கு ஏன் இந்த இனவெறி பேச்சைக் கண்டித்து விக்கிரமாதித்தன் தலையங்கம் தீட்டவில்லை என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் விக்கிரமாதித்தனை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று அன்று அந்த பிசாசு கூறிய மற்றோன்றையும் விக்கிரமாதித்தன் நினைவுப்படுத்திக்காட்டுகிறார். தனது கதைகளைப் படிக்கும் வாசகர்கள் மறந்திருப்பார்கள் அல்லவா? நினைவுப்படுத்த வேண்டாமா? “தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் ஜோக்கர்கள்” என்று பிசாசு கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். அதற்காகத் தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவர்களே கூட பெரிதாக கோபித்துக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டாத விக்கிரமாதித்தன், இவ்வாறு கூறி வேதாள அரசிற்கு ஒரு இராஜரீதியான சங்கடத்தை ஏற்படுத்தினார் என்று கசிந்துருகுகிறார் இப்போது.

அதுமட்டுமல்ல, சுதந்திரப் வேங்கைகளை முழுமையாக வீழத்தி வெற்றிகண்டுள்ள நிலையில், 75 விழுக்காடு சிங்களவர்களுக்கும், மீதமுள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நிலையற்ற உறவை, அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி ஆகிய அடிப்படைகளில் மறுவரையறை செய்ய வேண்டிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிசாசு தனக்கு எதிராக களத்தில் குதித்திருப்பதால் வேதாளம் சற்றும் மனந்தளரவில்லை என்று அதன் பெருமையைக் கூறி புளங்காகிதம் அடைகிறார் விக்கிரமாதித்தன்.

தனது பதவிக் காலம் இன்னுமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையிலும், எதற்காகத் தேர்தலை உடனே நடத்த வேதாளம் முன்வந்துள்ளது தெரியுமா? வடக்கில் வாழும் மக்களுக்கு வேங்கைகளால் பறிக்கப்பட்ட வாக்குச் சுதந்திரத்தை மீண்டும் அளிப்பதற்குத்தானாம்! யே..அப்பா, எவ்வளவு பெரிய தியாகத்தை செய்கிறது வேதாளம்! மெய் சிலிர்க்க வைக்கிறார் விக்கிரமாதித்தன். வடக்கில் வாழும் மக்கள் வாக்குச் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமே என்பதற்காகவே தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடத்துகிறதாம் வேதாளம். ஆஹா..ஆஹா...வேதாளத்தின் கருணையே கருணை.

வடக்கில் வாழும் மக்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் குண்டுகள் வீசப்பட்டதா? பீரங்கியால் சுட்டால் மட்டும் போதாது என்பதற்காக, விமானங்களில் இருந்தும் குண்டுகள் பொழிப்பட்டதா? வன்னியில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அவர்களை துரத்தித் துரத்திக் கொன்றது வாக்குரிமை அளிக்கத்தானா? ‘எல்லாம் முடிந்த’ப் பிறகும் அவர்களை வன்னி முகாம்களில் சோறு தண்ணிக் காட்டாமல் முள்வேலிகளுக்குள் முடக்கி வைத்ததும், இன்னமும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரை அடைத்து வைத்திருப்பதும் வாக்குரிமை சுதந்திரத்திற்குத்தானா? அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் சிங்களர்களை குடியேற்றம் செய்வது கூட, வடக்கு மக்களுக்கு வாக்குரிமை வழங்கத்தானா? அடேயப்பா... இவ்வளவு விவரங்களையும் இத்தனை நாள் விக்கரமாதித்தன் தெரிவிக்காமல் மறைத்துதான் ஏனோ? இது புரியாமல் தமிழர்களும், உலக நாடுகளும் என்னவெல்லாம் பேசிவருகின்றன... சே!

வேதாளத்தின் நோக்கமென்ன? அதிகாரப் பகிர்வு, சமத்துவம், நீதி! சொல்கிறார் விக்கிரமாதித்தன். இதெல்லாம் தான் எடுத்த பேட்டியில் வேதாளம் சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள், அதெல்லாம் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் கேட்கப்படாமலோ அல்லது சொல்லப்படாமலோ விடப்பட்டிருக்கலாம். வேதாளத்தின் நோக்கம் சமத்துவமே! நம்புங்கள், ஏனென்றால் இப்படிப்பட்ட கதைகளை அந்த வாசகர்கள் நம்புவதால்தானே அது நெம்பர் ஒன் தேசிய நாளிதழாக திகழ்கிறது!

அது சரி, அடுத்தக் காட்டு அரசியல் விவகாரத்தில் விக்கிரமாதித்தனுக்கு என்ன இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு கேள்வி எழலாம், ஆனால் விடை அவ்வளவு சாதாரணமானதல்ல. இதில் மிகப் பெரிய பன்னாட்டு அரசியல் அடங்கியுள்ளது, இல்லையென்றால், விக்கிரமாதித்தன் கூந்தல் இந்த அளவிற்கு ஆடுமா?

இலங்கை ஆரண்யத்தை, அதன் ஆட்சியை தனது பிடிக்குள் கொண்டுவந்துள்ளது பரத நாட்டின் வடக்கே ஆட்சி செய்யும் சிகப்புச் சாத்தான். அதில் விக்கிரமாதித்தன் உபகாரம் மிகவும் அதிகம். இலங்கை ஆரண்யத்தை சிகப்புச் சாத்தான் பிடியில் இருந்து தனது பிடிக்குள் கொண்டு வர உலகப் பெரும் ராட்ஷசன் முயன்று வருகிறது. அதன் ஆதரவு பெற்ற குட்டி அரசியல் காட்டேரிகளின் ஆதரவுடன்தான் பிசாசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பரத நாட்டின் நிலை என்ன என்பதில் வேதாளத்திற்குச் சந்தேகம். அதனைத் தீர்க்கத்தான் பரத நாட்டு அமைச்சனின் இலங்கை ஆரண்ய விஜயம் நடந்தது. இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை, காரணம்: ராட்ஷசன் பரதநாடுடன் கொண்டுள்ள ஸ்ட்ராஜிக் ரிலேசன்ஷிப்.

இந்தச் சூழலில், பிசாசு வெற்றி பெற்றால் இலங்கை ஆரண்யம் ராட்ஷசன் கைக்குப் போய்விடுமே என்பதுதான் விக்கிரமாத்தித்தனின் கவலை. கடந்த பல ஆண்டுகளாக கொழும்பு ஆரண்யத்திற்குச் சென்று வேதாளத்தை அடிக்கடி சந்தித்ததால் ஏற்பட்ட நல்லுறவு எங்கே பயன்றறுப் போய்விடுமோ என்ற விசனம் விக்கிரமாதித்தனுக்கு. அதனால் விளைந்த எழுத்தோவியம்தான் இன்று காலையில் நாம் படித்தது. இதில் மக்கள் நலனோ அல்லது உலக நலனோ உள்ளது என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment